அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் தேர் எனப்படும் சிறிய தேர் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்களால், "ஓம் சக்தி "பராசக்தி கோஷத்துடன் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஏப் 21ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைத் தேர் திருவிழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து மே 28 மற்றும் 29ம் தேதியில் பெரிய தேர் எனப்படும் அவிநாசியப்பர் தேரோட்டம் நடைபெற்றது. இன்று காலை 10:35 மணிக்கு ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. பெண்கள், சிறுவர், சிறுமியர் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடத்தை பிடித்து பிற்பகல் 2.27 மணிக்கு நிலை சேர்த்தனர். அம்மன் தேரோட்டத்தை முன்னிட்டு நான்கு ரத வீதிகளிலும் உள்ள மண்டபங்களிலும் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள், அறக்கட்டளைகள் சார்பிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அம்மன் தேரைத் தொடர்ந்து "வெற்றிவேல் "வீரவேல் கந்தனுக்கு அரோகரா என நூற்றுக்குக்கும் மேற்பட்ட குழந்தைகள் கோஷமிட வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணியர் மற்றும் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் தேரை குழந்தைகள் உற்சாகத்துடன் இழுத்தனர். அதன் தொடர்ச்சியாக பூமி நீளாதேவி சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் தேரும் ரத வீதிகளில் பவனி வந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு டிஎஸ்பி ககைசபாபதி தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, எஸ்.ஐ.,க்கள் என 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். குடில் முட்டிகள் போடுபவர்களுக்கும், சன்னை போடுபவர்களுக்கும் மற்றும் தேர் வடம் பிடித்து இழுத்த பக்தர்களுக்கும் ஆதரவற்றோர் இல்லத்தை சேர்ந்தவர்கள் குடம் குடமாக தண்ணீர் சுமந்து தாகம் தனித்தனர். மேலும் தனியார் மருத்துவ முகாம்கள், தமிழ்நாடு தீயணைப்பு துறை மீட்பு பணி வீரர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், பல்வேறு அறக்கட்டளையினர் என சேவை பணிகளில் ஈடுபட்டனர்.