பதிவு செய்த நாள்
30
ஏப்
2026
11:04
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சென்னை கோட்டூரில் இயங்கி வரும் ஸ்ரீமஹா மேரு மண்டலி சார்பில் சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு, உலக நன்மைக்காக ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம கோடி குங்குமார்ச்சனையும், ஸ்ரீ சண்டியாகமும் நடத்தப்பட்டு வருகிறது.
17வது ஆண்டு சித்திரை பவுர்ணமி விழா நேற்று தொடங்கியது. மண்டலியின் நிறுவனர் மதுராம்பிகானந்த ப்ரஹ்மேந்த்ர சரஸ்வதி அவதுாத சுவாமிகள் தலைமை தாங்கி பூர்வாங்க பூஜைகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறும்போது, ஹயக்ரீவரால் அகத்தியருக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் உபதேசிக்கப்பட்டது. இதைப்பாராயணம் செய்தால் சகல வியாதிகளில் இருந்து விடுபடலாம். எல்லா விதமான செல்வங்களையும் அடையலாம். எல்லா விதமான பாபங்களிலிருந்தும் விடுபடலாம். அமைதியான வாழ்வு வாழலாம். பஞ்சபூதங்களின் செயல்பாட்டை சமநிலைப் படுத்தவும், உணவுப் பொருள்களின் விளைச்சலை அதிகப்படுத்தவும், நுண்ணுயிர்களால் ஏற்படும் எல்லா விதமான வியாதிகளையும் குணப்படுத்தி மக்கள் மகிழ்வுடன் வாழ ஸ்ரீ சாகம்பரி ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.
இதனைக் கருத்தில் கொண்டு உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் அமைதியுடனும் ஆரோக்கியத்துடனும் சகல நலங்களுடன் வாழ அருள்புரிய வேண்டி கும்ப கலசம் ஆவாகணம் செய்யப்பட்டு கும்ப பூஜைகள் நடைபெற்றன. மதுரகாளிஅம்மன் உற்சவ சிலை வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில், சென்னை, புதுச்சேரி, காஞ்சிபுரம், திருச்சி, தஞ்சை, திருவாரூர், காரைக்கால், பெரம்பலுார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மகளிர் 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம கோடி குங்குமார்ச்சனையும் ஸ்ரீ சாகம்பரி ஸஹஸ்ரநாம குங்குமார்ச்சனையும், அஷ்டகங்கள், ஆயுர் தேவி ஸ்துதிகள் பாராயணமும் செய்தனர். முடிவில் பஜனைகளும் நடந்தன. மதியம் முதல் மாலை வரை நவாவரண பூஜையையும் சண்டி மஞ்சரி பூஜையும் நடைபெற்றன. பூஜையை மண்டலியின் ஆன்மிக தன்னார்வலர்கள் நடத்தி வைத்தனர்.
சித்ரா பவுர்ணமி 2-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை ஸ்ரீ சண்டி மகாயாகம் நடக்கிறது. இதில், மண்டலியைச் சேர்ந்த வேத விற்பன்னர்கள் பங்கேற்று மகாயாகத்தை நடத்தி வைக்கின்றனர். அதனைத்தொடர்ந்து ஸ்ரீமதுரகாளி அம்மனுக்கு அபிசேகமும், மகா தீபஆராதனையும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை மண்டலியின் நிர்வாக அறங்காவலர் நீலா மேற்பார்வையில் மண்டலியைச் சேர்ந்த தேவி உபாசகர்கள், ஆன்மீக தன்னார்வலர்கள் செய்திருந்தனர். முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது.