திருக்கோவிலூர் பாலசுப்பிரமணியர் கோவில் சித்திரை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2026 11:05
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடந்தது.
திருக்கோவிலூர், ஆஸ்பிட்டல் ரோட்டில் உள்ள பழமை வாய்ந்த வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் கோவில் சித்திரை பெருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 6:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியருக்கு மகா அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலை 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் எழுந்தருளி மகா தீப ஆராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து, அரோகரா கோஷம் முழங்க கீழையூர், கிழக்கு வீதி, தெற்கு வீதி, மேலவீதி ஆஸ்பிடல் ரோடு வழியாக இழுத்துச் சென்றனர். தேர் மாலை 6:00 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. இன்று காலை தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி வைபவமும், இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விஷ்வகர்மா சமூகத்தினர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.