மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று மண்டூக முனிவர் சாப விமோசனம் அளிக்கிறார் கள்ளழகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2026 12:05
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். இதனால், அவர் "மண்டூக மகரிஷி என பெயர் பெற்றார்.
பழங்காலத்தில் முனிவர் ஒருவர் நாரத முனிவரின் சீடராக இருந்தார். இவர் மதுரையின் வடக்கே உள்ள அழகர்மலை அருகே உள்ள வைகை ஆற்றில் நீரடியில் அமர்ந்து தீவிர தவம் செய்து வந்தார். ஒருமுறை, கோபக்காரராக அறியப்படும் துர்வாச முனிவர் மண்டூக முனிவரைச் சந்திக்க வந்தார். அப்போது மண்டூக முனிவர் ஆழ்ந்த தவத்தில் (நீருக்கு அடியில்) இருந்ததால், துர்வாச முனிவர் வந்ததை கவனிக்கவில்லை. இதனைத் தன்னைக் அவமதித்ததாகக் கருதிய துர்வாச முனிவர், "நீ தவளை போல நீரிலேயே முழ்கிக் கிடப்பதால், தவளையாகப் போவாய்" என்று சாபமிட்டார். தவளையாக மாறிய முனிவர் (மண்டூகம் என்றால் சமஸ்கிருதத்தில் தவளை என்று பொருள்), தன் தவறை உணர்ந்து துர்வாச முனிவரிடம் மன்னிப்பு வேண்டினார். மனமிறங்கிய துர்வாசர், "நீ வைகை ஆற்றில் தவம் செய்துகொண்டிரு. அழகர்மலையில் வீற்றிருக்கும் கள்ளழகர் (விஷ்ணு), மதுரைக்கு வரும்போது உனக்கு சாப விமோசனம் அளிப்பார்" என்று வழி கூறினார். இந்த சாப விமோசன நிகழ்வுதான் இன்றும் சித்திரைத் திருவிழாவில் கொண்டாடப்படுகிறது.
அழகர் தனது தங்கையான மீனாட்சியின் திருமணத்திற்கு அழகர் மலையிலிருந்து மதுரைக்குக் கிளம்புவார். வைகையில் இறங்குதல்: வழியில் தங்கையின் திருமணம் முடிந்துவிட்டதை அறிந்து, கோபத்துடன் ஆற்றில் இறங்குவார். பின்னர் வைகை ஆற்றின் நடுவே இருக்கும் தேனூர் மண்டபத்திற்கு அழகர் எழுந்தருளுவார். அங்கு தவளை உருவில் தவம் செய்துகொண்டிருக்கும் மண்டூக முனிவருக்குக் காட்சி தந்து, அவருக்குச் சாப விமோசனம் அளிப்பார். இந்த நிகழ்வின் போது, முனிவருக்குச் சாப விமோசனம் அளித்த பிறகு, அழகர் பத்து அவதாரங்களை (தசாவதாரம்) எடுத்து முனிவருக்குக் காட்சி அளிப்பார் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு மிக்க இந்த நிகழ்வு இன்று மதியம் 12.00 மணிக்கு துவங்கி வெகு விமர்சையாக நடைபெறுகிறது.