அர்ஜுனனின் மகன் அபிமன்யுவிற்கும், அவன் மனைவி உத்தரைக்கும் பிறந்தவன் பரீட்சித்து. ஒருநாள் இவன் தவத்திலிருந்த சமீக ரிஷியின் மீது விளையாட்டாக இறந்த பாம்பை போட்டு அவமதித்தான். இதனை அறிந்த ரிஷியின் மகன் சிருங்கி முனிவர், கோபம் கொண்டு பரீட்சித்தை பாம்பு தீண்டி இறந்து போக சாபமிட்டார். அதன்படியே பரீட்சித்தும் இறந்தான். இதனால் கோபமடைந்த பரீட்சித்துவின் மகன் ஜன்மேஜயன், பாம்பு வர்க்கமே உலகில் அழிந்து போக சர்ப்பயாகம் தொடங்கினான். வைசம்பாயனர் தலைமையில் யாகம் தொடங்கியது. அதற்காகப் போடப்பட்ட பந்தலைக் கண்ட ஸ்தபதி ஒருவர், வாஸ்து சாஸ்திரப்படி பந்தல் அமையாததால் யாகம் நிறைவு பெறாது என்று தெரிவித்தார். பரீட்சித்தை தீண்டிய தட்சகன் என்னும் பாம்பு யாகத்தீயில் விழுவதற்கு முன்பே, ஆஸ்திக முனிவர் என்பவரின் வேண்டுகோளை ஏற்று சர்ப்பயாகம் பாதியில் நின்று போனது.