மதுரை: திருப்பரங்குன்றம் மலையை அளவிடும் பணியை மத்திய தொல்லியல் துறையினர் மற்றும் வருவாய் அலுவலர்கள் துவக்கினர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தின் தொடர்ச்சியாக, ஹிந்து தர்ம பரிஷத் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சமண கோயில்கள், பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரை கோயிலை பாதுகாக்க வேண்டும். ஒட்டுமொத்த மலையையும் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும், எனக் குறிப்பிட்டிருந்தார்.
விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி அமர்வு, மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்ய வேண்டும். இப்பணியை மே 31 க்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலையை அளவிடும் பணியை மத்திய தொல்லியல் துறையினர் மற்றும் வருவாய் அலுவலர்கள் துவக்கினர். வருவாய் துறையினர் டிஜிபிஎஸ் என்ற நவீன கருவி மூலம் மலையை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பழனி ஆண்டவர் மலைப்பாதையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். போலீஸ் பாதுகாப்புடன் இன்று முதல் 3 நாட்களுக்கு அளவிடும் பணி நடைபெறுகிறது. இந்த ஆய்வின் அடிப்படையில் மதுரை கலெக்டர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார்.