பதிவு செய்த நாள்
21
ஜன
2013
03:01
*உலகில் பிறந்த அனைவருமே மகிழ்ச்சியாக வாழ விரும்புகின்றனர். நல்ல உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைகள், மற்ற வாழ்வியல் தேவைகள் அனைத்தும் தேவைப்படுகின்றன. இவற்றைப் பெற கல்வியறிவு, தகுந்த பயிற்சி, முயற்சி ஆகியவை உதவுகின்றன.
*மாணவப் பருவத்தில் செய்யும் சிறு தவறு கூட எதிர்காலத்தைப் பாதித்துவிடும். சமுதாயத்தின் ஒரு அங்கமாக இருக்கும் மாணவன், தன் கடமையிலிருந்து தவறும்போது, சமுதாயம் புறக்கணிக்கும் ஒருவனாக மாறி விட நேரிடும்.
*அறிவைப் பெறும் தாகம் கொண்டவனே நல்ல மாணவன். பசி உணர்வு எழும்போது செரிமான சக்தி அதிகரிப்பது போல, கற்கும் ஆர்வத்திற்கேற்ப அறிவும் மாணவனிடம் அதிகரிக்கும்.
*கல்வி என்பது வாழ்க்கைக்கு மகிழ்ச்சியைத் தரவல்ல பொருள்களை ஈட்ட உதவும் என்பது உண்மை என்றாலும், கல்வியின் பயன் அறிவைப் பெறுவதே.
*செல்வம், அதிகாரம் என்னும் எந்த குறுக்குவழியாலும் பெற முடியாதது அறிவு. காப்பியடித்தோ, திருட்டுத்தனம் செய்தோ பட்டம் பெறலாம். பதவிக்கு வரலாம். ஆனால், பதவிக்கு வந்த பின் அதை தக்கவைத்துக் கொள்ள போராட வேண்டிவரும்.
*மனித வாழ்வில் பிரச்னைகளைத் தவிர்க்க முடியாது. அதைச் சமாளித்து வெற்றி பெற விடாமுயற்சியும், நேர்மையான கல்வி அறிவும் வேண்டும்.
*ஆசிரியர் அறிவைப் பெற்றிருந்தால் மட்டும் போதாது. அதனை மாணவர்களுக்கு புரியும் விதத்தில் எடுத்துச்சொல்ல தெரிந்திருக்க வேண்டும்.
*நல்ல ஆசிரியர் என்பவர் எல்லாவற்றையும் கற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக தகுந்த ஆலோசனைகள் அளித்து மாணவரின் தேடுதல் திறனை அதிகரித்து சுயமுயற்சியில் கற்று கொள்பவராக மாற்றுவது அவசியம்.
*ஆசிரியர் மாணவர் உறவு என்பது வகுப்பறையோடு நின்று விடக் கூடாது. செயற்கைத்தனமாக இல்லாமல் மனிதாபிமானத்துடன் கூடியதாக அமைவதே சிறப்பு. குருகுலக்கல்வியில் இருந்ததுபோல, ஆசிரியர்கள் மாணவர்களைச் சொந்தப் பிள்ளைகளாக எண்ணி கல்வி புகட்ட வேண்டும்.
*சமுதாயத்தின் அடிப்படை அமைப்பு குடும்பம். குழந்தைக்கு முதல் பள்ளிக் கூடம் வீடு தான். பெற்றோரே குழந்தையின் முதல் ஆசிரியர்கள்.
*குழந்தைப் பருவத்தில் கொடுக்கப்படும் பயிற்சியும், மனதில் பதியும் கருத்துக்களும் தான், வாழ்நாள் முழுவதும் நீடித்து நிற்கும். பெற்றோர் இதில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.
*பழங்காலத்தில் பெற்றோரை தெய்வமாகப் போற்றும் மரபு சீடர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. தற்போது இந்தநிலை மாறி வருகிறது. பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிவதில்லை. பிள்ளைகள் எங்களை மதிப்பதில்லை என்று பெற்றோர் புகார் சொல்கின்றனர். பிள்ளைகளோ, பெற்றோர் எங்களைப் புரிந்து கொள்வதில்லை என்று புலம்புகின்றனர். இந்த தலைமுறை இடைவெளியால், வீடு என்பது இனிய இல்லமாக இல்லாமல் விடுதியாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
*மாணவர்களுக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் போதித்தால் மட்டும் போதாது. தாங்களும் நீதி, ஒழுக்கம், ஆன்மிகம் இவற்றை பின்பற்றி முன்மாதிரியாகத் திகழ வேண்டும். இதன்மூலம் பெற்றோர்-பிள்ளை, ஆசிரியர்- மாணவர் உறவு மேன்மை பெறும்.
ஹர்ஷானந்தர்