பதிவு செய்த நாள்
22
ஜன
2013
10:01
வேதாரண்யம்: தனியார் நிலத்தில் குளம் தோண்டியபோது, பூமிக்கடியில் பழமையான, ஐந்து கற்சிலைகளை கண்டெடுத்து, தாசில்தாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி வடக்கு கல்லுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவருக்கு சொந்தமான இடத்தில், நேற்று முன்தினம் இரவு, குளம் வெட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மூன்று அடி ஆழம் குழி வெட்டிய நிலையில், பூமிக்கடியில், ஐந்து கற்சிலைகள் சிதலமடைந்த நிலையில் கிடந்தன.இதில், நான்கரை அடி உயரத்தில் ராமர் சிலை, மூன்றரை அடி உயரத்தில் சீதை, முக்கால் அடி உயரத்தில் லட்சுமணன் சிலை, அமர்ந்த நிலையிலுள்ள அம்மன் சிலை, ஒன்றே முக்கால் அடியிலும், மற்றொரு அம்மன் சிலை, மூன்றரை அடி உயரத்திலும் இருந்தது. இந்த சிலைகளின் கைகள், உடல் பாகம் உடைந்த நிலையில் உள்ளது.இது குறித்து தகவலறிந்த, வேதாரண்யம் தாசில்தார் புண்ணியகோடி தலைமையில், வருவாய்த் துறையினர் சிலைகளை கைப்பற்றி, தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். "இந்த சிலைகள் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை என, தொல்லியல்துறை ஆய்வாளர்கள் ஆய்வுக்கு பின் தான், உறுதியாக கூற முடியும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.