பதிவு செய்த நாள்
23
ஜன
2013
10:01
ஊட்டி: ஊட்டி அருகே, கோத்தர் இன மக்களின் குல தெய்வ பண்டிகையின் சிறப்பம்சமாக, ஆண்கள் "ஆட்குபஸ் உடையணிந்து நடனமாடினர். இதை, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர். நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் கோத்தர் இன மக்களின் குல தெய்வமான "அய்னோர் அம்னோர் தெய்வத்தின் பண்டிகை, கோக்கால் கிராமத்தில் கடந்த 11ம் தேதி துவங்கியது. இதன் ஒரு பகுதியாக கிராம பெண்கள், அவர்களின் குல தெய்வ நிலத்தில் இருந்து களி மண்ணை எடுத்து வந்து, பானைகளை செய்தனர். கடந்த 19ம் தேதி, ஆண்கள் மட்டும் அங்குள்ள ஆற்றில் குளித்து, குல தெய்வ கோவிலில் பூஜை செய்தனர். 21ம் தேதி, சாமை என்ற தானியத்தில் பொங்கல் செய்து, புதிய மண் பானையில், குல தெய்வத்துக்க படையலிட்டனர். நிறைவு நாளான நேற்று, சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன், ஆண்களும் பெண்களும், நடனமாடினர். இதில், சிறப்பம்சமாக, ஆண்கள் ஐந்து பேர் "ஆட்குபஸ் என்ற உடையை அணிந்து, நடனமாடினர். இதனை பார்த்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வியப்படைந்தனர். இன்று (23ம் தேதி), பெண்கள் மட்டும் தெய்வீக பாடல்களை பாடி, விழாவை நிறைவு செய்யவுள்ளனர்.