பதிவு செய்த நாள்
23
ஜன
2013
10:01
நகரி: திருமலை கோவிலில், சாமி தரிசனம் முடித்த நாளன்றே பக்தர்கள், நள்ளிரவுக்குள், டோக்கனை கொடுத்து, லட்டு பிரசாதத்தை வாங்கிவிட வேண்டும்; தாமதமாக அடுத்த நாள் சென்றால், லட்டு வழங்கப்பட மாட்டாது என, தேவஸ்தானம்அறிவித்து உள்ளது. திருமலை கோவிலில் முக்கிய பிரமுகர் ஆர்ஜித சேவைகள், சிறப்பு நுழைவு தரிசனம், சிறப்பு தரிசனம், பாதயாத்திரை திவ்ய தரிசனம், இலவச தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு, தலா, இரண்டு லட்டு டோக்கன்கள் வழங்கப்படுகிறது.இதை, தரிசனம் முடித்த நாளன்றே, உடனடியாகவோ, நள்ளிரவுக்குள்ளோ வாங்கி விட வேண்டும். ஒவ்வொரு நாளும், லட்டு வினியோக கவுன்டர்கள் நள்ளிரவு, 1:30 மணி வரை திறந்திருக்கும். இந்த நேரத்திற்குள்ளாக, தங்களிடம் உள்ள டோக்கன், டிக்கெட் ஆகியவற்றை, லட்டு வினியோக கவுன்டரில் அளித்து, லட்டு பிரசாதத்தை பெற்று கொள்ள வேண்டும். இதற்கு பின், அடுத்த நாளாக கணக்கிடப்படும்.
முதல் நாள் தரிசனம் முடித்துவிட்டு, மறுநாள் காலை லட்டு வாங்கி கொள்ளலாம் என, பக்தர்கள் வருகின்றனர். டோக்கன் செல்லு படியாகாது என, லட்டு வினியோகிக்கும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், பிரச்னை ஏற்படுகிறது. நேற்று முன்தினம், லட்டு கவுன்டர் அருகே ஊழியர்களுக்கும், பக்தர்களுக்கும் இடையே விவாதம் ஏற்பட்டது. லட்டு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் சிலர், தேவஸ்தான நிர்வாக அதிகாரி, சின்னம்காரி ரமணாவிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அவர் பக்தர்களுக்கு லட்டு வினியோகம் செய்ய உத்தரவிட்டார்.இந்த பிரச்னை அடிக்கடி நடப்பதால், தேவஸ்தானம் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள், 16 மணி நேரம், 20 மணி நேரம் காத்திருந்தாலும், அவர்கள் தரிசனத்திற்கு செல்லும் முன் வழங்கப்படும், டோக்கனில் உள்ள தேதி தான் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். நள்ளிரவில், கோவில் நடை சாத்தப்பட்ட நேரத்திலிருந்து, அரை மணி நேரம், மணி வரை லட்டு கவுன்டர்கள் திறந்து இருக்கும். இரவில் தரிசனம் முடித்த பக்தர்கள், உடனடியாக லட்டு வாங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுவாக, தரிசனம் முடித்த பக்தர்கள், தாமதிக்காமல், உடனடியாக லட்டு வாங்கிவிட்டால் எவ்வித பிரச்னையும் இல்லை, சிலர் ஊருக்கு போகும்போது வாங்கி கொள்ளலாம் என, அடுத்த நாள் செல்லும் போது தான் பிரச்னை வருகிறது என, ஊழியர்கள் தெரிவித்தனர்.