பதிவு செய்த நாள்
23
ஜன
2013
11:01
சிவகங்கை: சிவகங்கை கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோவிலில் மந்த நிலையில் நடக்கும் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை அருகே கொல்லங்குடி - அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளிகோவிலுக்கு, வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு, உண்டியல் வசூல், நிலம் மூலம் ஆண்டிற்கு பல லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது. வேண்டுதல் வைத்து செல்பவர்களுக்கு உடனடியாக நிறைவேறும் என்பதால், நாளுக்கு நாள் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலை சுற்றி சிமென்ட் ரோடு போடப்பட்டுள்ளது.கோவில் முன்பாகவும், நாடக மேடைக்கு முன்பும் பக்தர்களின் வசதிக்கென, "பிளாஸ்டிக் சீட் மூலம் மேற்கூரை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கூரை அமைக்கும் பணி, கடந்த சில மாதங்களாக மந்த நிலையில் உள்ளது. மேற்கூரைக்காக,இரும்பு "ஆங்கிள் மட்டுமே அமைத்துள்ளனர். இவை அமைத்து பல மாதங்களாகியும்,மேற்கூரைக்கு "ஆஸ்பெஸ்டாஸ் சீட் போடவில்லை.பக்தர்கள் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதே போன்று, கோவில் பின்புறமுள்ள இலவச கழிப்பிடம் செயல்பாடின்றி பூட்டி கிடக்கிறது.கோவில் வெளி பிரகாரத்தை சுற்றி, பாலித்தீன் கழிவுகளை பக்தர்கள் போட்டுவிட்டு செல்வதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. வளர்ச்சி பணிகளை விரைந்து முடித்து, சுகாதாரம் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மேற்கூரைக்கான சீட் அமைக்க, மின்கம்பங்கள் இடையே மின் வயர்கள் செல்கின்றன.அவற்றை அப்புறப்படுத்த,மின் வாரியத்திற்கு மனு செய்துள்ளோம்.அவர்கள் மாற்றி அமைத்தால்,உடனே பணி முடியும், என்றார்.