பதிவு செய்த நாள்
23
ஜன
2013
11:01
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் சந்து மாரியம்மன் திருவிழா நடந்தது. சின்னாளபட்டியில் 60 ஆண்டுகளுக்கு முன் காலரா, அம்மை உள்ளிட்ட கொள்ளை நோய்கள் பரவி, பல உயிர்களை பறித்தது. இந்த நோய்களின் பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்காக, மாரியம்மன் வழிபாட்டை துவங்கினர். இதனால் நோயின் தாக்கம் மறைந்தது. இதன்பின் தொடர்ந்து, வரும் முன்னர் காக்கும் விதமாக, ஆண்டு தோறும், தை பொங்கல் முடிந்ததும், வளர்பிறையில் வரும் முதல் செவ்வாய் கிழமை கையெடுத்து கும்பிடுதல் எனப்படும்,திருவிழா சாட்டுதல் நடக்கும். மறு செவ்வாய் கிழமை, காலை மேளதாளத்துடன் கரகம் அலங்கரிக்க குறிப்பிட்ட கோயில்களுக்கு செல்வர். அலங்கரிக்கப்பட்ட கரகத்தை பூசாரி எடுத்து வர நகர்வலம் நடக்கும். பின்னர், முச்சந்தியில் அமைத்துள்ள பந்தலை கரகம் வந்தடையும், மதியம் அன்னதானம் வழங்கப்படும். மாலையில் விளையாட்டு போட்டிகள், விளக்கு பூஜை நடக்கும். இந்தாண்டும் திருவிழா நடந்தது.நோயில் இருந்து பாதுகாப்பதற்காக துவங்கப்பட்ட முச்சந்தி மாரியம்மன் வழிபாடு, சமுதாய ஒற்றுமைக்கு வழிவகுக்கும், திருவிழாவாக நடக்கிறது.