பதிவு செய்த நாள்
23
ஜன
2013
11:01
காஞ்சிபுரம்: முசரவாக்கத்தில் இரண்டு நாள் மைலார் திருவிழா, வெகு விமரிசையாக நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கத்தில், ஒவ்வொரு ஆண்டும், தை மாதம், இரண்டு நாட்கள் மைலார் திருவிழா கொண்டாடப்படுகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டு விழா, நேற்று முன்தினம் துவங்கியது. இங்குள்ள மந்தைவெளியில், கோட்டைமாரியம்மன், அடைஞ்சியம்மன் ஆகியோர் மலர் அலங்காரத்தில், குதிரை, சிங்கம் வாகனங்களில் எழுந்தருளினர்.கோவிலில் இருந்து பக்தர்கள் உடலில் அலகு குத்தி, தேர் இழுத்து, கரகாட்டம் - புலியாட்டம் ஆடியபடி, பஜனைப் பாடல்கள் பாடி மந்தைவெளியை அடைந்தனர். பக்தர்கள், 60 அடி உயர அந்தரத்தில் தொங்கியபடி, சுவாமிகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது.அந்தரத்தில் இருந்து, எலுமிச்சம் பழங்களை பொதுமக்களிடம் வீசினர். எலுமிச்சம் பழங்களை பெற, பக்தர்களிடையே கடும் போட்டி நிலவியது. வாணவேடிக்கைக்கு பின், வீதியுலா நடந்தது. நேற்று துரியோதனின் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. முசரவாக்கம், பெரும்பாக்கம், முத்துவேடு, பிச்சிவாக்கம், தாமல், பாலுசெட்டி, திருப்பருத்திக்குன்றம் ஆகிய கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.