விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த ஆலத்துார் கிராமத்தில், விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது, சோழர் காலத்தைச் சேர்ந்த அரிய முருகன் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து செங்குட்டுவன் கூறுகையில், ‘ஆலத்துார் கிராமத்தில் வயல்வெளியில், வெட்ட வெளியில் பலகைக் கல் சிற்பத்தை அப்பகுதி மக்கள் பெண் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஆய்வில், அது முருகன் சிற்பமாகும். தலையில் கரண்ட மகுடம் அலங்கரிக்க 4 கரங்களுடன் நின்ற நிலையில் முருகன் காட்சி தருகிறார். அவரது பின்னிரு கரங்களில், வலது கரம் சக்தி ஆயுதத்தையும், இடது கரம் அட்ச மாலையையும் ஏந்தியுள்ளன. முன்னிரு கரங்களில், வலது கரம் அபய முத்திரையுடனும், இடது கரம் இடுப்பின் மீதும் உள்ளன. நீண்ட காதணிகள் மற்றும் கழுத்தணி, இடையாடை காணப்படுகின்றன. முகம் தேய்ந்த நிலையில் தெளிவாக இல்லை. இச்சிற்பம் கி.பி.10ம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சேர்ந்த, 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். கைகளில் சக்தி ஆயுதம் மற்றும் அட்ச மாலை ஏந்தி நிற்கும் முருகன் சிற்பம் மிகவும் அரியதாகும். மாவட்டத்தில், இதுவரை கண்டறியப்பட்ட முருகன் சிற்பங்களில் இது அரியதும் தனித்துவம் வாய்ந்ததாகும்’ என்றார். ஆய்வின்போது ஆரோவில் நீலமேகம் உள்ளிட்டோர் உடனிருந்தார்.