பதிவு செய்த நாள்
23
ஜன
2013
11:01
மோகனூர்: மோகனூர் காவிரி ஆற்றின் கரையில் பிரசித்தி பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு ஸ்வாமி பத்மாவதி தாயாருடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். புராதன சிறப்பு மிக்க இக்கோவிலில், இன்று (ஜன., 23) கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மோகனூரில் பெரியவர் ஒருவர் வசித்து வந்தார். அவர், ஆண்டு தோறும் திருமலை பிரம்மோத்ஸவத்திற்குச் சென்று ஏழுமலை பெருமாளை தரிசித்து வந்தார். வயோதிகத்தினால், அந்த பக்தருக்கு வாதநோய் ஏற்பட்டு, திருமலைக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இனி ஏழுமலையானை தரிசிக்க முடியாதே, என மனம் வருந்திய பெரியவர், காவிரியில் உயிரை விட முடிவு செய்தார். அப்போது, கரை புரண்டோடும் காவிரியில் பெரிய கருநாகம் தோன்றி, அவரை விரட்டியது. அவர் வீடு வந்து சேரும் வரை விரட்டிச் சென்ற கருநாகம், அவர் வீடு சென்றவுடன் மறைந்து விட்டது. அன்று இரவு, பெரியவர் கனவில் தோன்றிய பெருமாள் ஸ்வாமி, "என்மீது அளவற்ற பக்தி கொண்ட உன்னால், திருமலையில் உள்ள என் சன்னிதிக்கு வரமுடியாமல் போனதால், உனக்கு தரிசனமளிக்க நானே வந்துவிட்டேன் என, திருவாய் மலர்ந்தார். அந்த பெரியவர் கனவில் தரிசனம் அளித்த ஸ்வாமி, தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதற்காக, அங்கேயே கல்யாண வெங்கட் ரமண பெருமாளாக எழுந்தருளினார்.
சம்மோஹன கிருஷ்ணனின் திருவருள், தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக, கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் ஸ்வாமி கோவிலில், இன்று (ஜன., 23) காலை, 9 மணி முதல், 10 மணிக்குள் நடக்கும், கோவில் மற்றும் ராஜகோபுரம் சம்ப்ரோஷண விழாவில், சம்மோஹன கிருஷ்ணன் விக்கிரகத் திருமேனியும் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. கோவிலில் எழுந்தருளியுள்ள சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னிதி உள்ளது. அவருக்கு பால் அபிஷேகம் செய்யும் போது, பால் நீலநிறமாக காணப்படும் என்பது சிறப்பு. அந்தநேரத்தில் அவரை வழிபட்டால், அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தன்று, சத்தியநாராண பூஜை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்று, மட்டை தேங்காய் வைத்து வழிபட்டால், வேண்டுதல் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேறும் என்பதும் ஐதீகம். இத்தகைய சிறப்பு மிக்க கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு, திருமால் வழிபாட்டு மன்றம் மற்றும் விழாக்குழுவினர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளனர்.