பதிவு செய்த நாள்
24
ஜன
2013
10:01
பழநி: தைப்பூசத்தை முன்னிட்டு, பழநி கோவிலில் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய, தேவஸ்தானமும், பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசாரும் மேற்கொண்டுள்ளனர். பழநி கோவில் தைப்பூச விழாவிற்கு வரும் பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜன., 27ல் நடக்கிறது. படிப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றும் பணி நடக்கிறது. மலைக் கோவிலுக்குச் செல்ல யானைப் பாதையையும், அடிவாரத்திற்கு இறங்கி வர, படிப்பாதையும் பயன்படுத்தப்படும். இது தவிர, கூட்ட நெரிசலின்போது, அடிவாரம் பாதவிநாயகர் கோவில் நுழைவாயில் வழியே பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட உள்ளது. மலைக்கோயில், வின்ச் ஸ்டேஷன் பகுதி உட்பட பக்தர்களுக்கு, 20 இடங்களில் மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. யானைப்பாதை வழியில் தற்காலிக கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு: டி.ஐ.ஜி., அறிவுச்செல்வன், எஸ்.பி., ஜெயச்சந்திரன் தலைமையில், 3,000க்கும் அதிகமான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தனியார் செக்யூரிட்டி பணியாளர்கள், ஊர்க்காவல் படையினர், என்.எஸ்.எஸ்., - என்.சி.சி., மாணவர்கள், போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இரவு நேர விளக்கு வெளிச்சத்திற்காக, 50 ஆயிரம் ஒளிரும் குச்சிகள், பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
ஆக்கிரமிப்பு செய்தோர் மீது தடியடி : பழநி கோவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, கிரிவீதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. அப்போது, இடையூறு செய்தவர்கள் மீது, கோவில் செக்யூரிட்டிகள் தடியடி நடத்தினர். வின்ச் ஸ்டேஷன் எதிர்புறம், தள்ளுவண்டி கடையை அப்புறப்படுத்தும்போது, இடையூராக இருந்தவர்கள் மீது, கோவில் செக்யூரிட்டிகள், பொருட்களை தூக்கி எறிந்து, தடியடி நடத்தினர். இணைக்கமிஷனர் பாஸ்கரன், "கடைகளை எடுக்க சொல்லுங்கள்; பொருட்களை தூக்கி எறிய வேண்டாம். அவர்கள் மீது தடியடி செய்யக் கூடாது என, செக்யூரிட்டிகளை கண்டித்தார். "தேவஸ்தான இடத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் வைத்தால் அவர்கள் மீது சட்டப்படி, நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.