பதிவு செய்த நாள்
24
ஜன
2013
10:01
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி தேவாலயம், "பசிலிக்கா அந்தஸ்து பெற்ற பொன் விழா ஆண்டையொட்டி, சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. நாகை அடுத்த, வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயம், கீழை நாடுகளின் லூர்து என, அழைக்கப்படுகிறது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்தேவாலயம், 1962ல், பசிலிக்கா (பேராலயம்) அந்தஸ்து பெற்றது. பசிலிக்கா அந்தஸ்து வழங்கப்பட்ட, 50வது ஆண்டு பொன் விழா நிகழ்ச்சியாக, இந்திய அஞ்சல் துறை மூலம், வேளாங்கண்ணி தேவாலயம் படம் பொறிக்கப்பட்ட, சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, தேவாலய கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அஞ்சல் துறைத் தலைவர் சாந்தி நாயர், தேவாலயம் படம் பொறிக்கப்பட்ட, சிறப்பு அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் உறையை வெளியிட்டார். அதை, தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் பெற்றுக் கொண்டார்.