உத்தரகோசமங்கையில் ஆனி திருமஞ்சன விழா; நடராஜருக்கு 32 வகை அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2026 07:06
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா இன்று அதிகாலை நடந்தது.
உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலின் வடக்கு பகுதியில் தனி சன்னதியாக மரகத நடராஜர் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். இவரது சன்னதி முன்பாக இன்று அதிகாலை 3:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நிறைவடைந்த உற்ஸவ மூர்த்திகளான நடராஜர், சிவகாமி அம்மனை மரகத நடராஜரின் சன்னதி மூலமாக அமைக்கப்பட்ட அலங்கார மேடைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு உற்ஸவ மூர்த்திகளுக்கு 32 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் தொடர்ந்து நடந்தது. காலை 6:30 மணிக்கு பூஜைகள் நிறைவடைந்தது. ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் நடத்தப்படும் ஆனி திருமஞ்சனம் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக ஆனி மாத உத்தர நட்சத்திரமும், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்திலும் செய்யப்படும் அபிஷேகங்கள் சிறப்பு வாய்ந்தவை. உற்ஸவமூர்த்திக்கு நடந்த அபிஷேக அலங்கார தீபாராதனைகளை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். தேவாரம், திருவாசகப் பாடல்கள் பாடப்பட்டது. கைலாய வாத்தியம் இசைக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.