பதிவு செய்த நாள்
28
ஜன
2013
10:01
திருப்புத்தூர்: நீர் வளம் பெருக, வைணவத் தலங்களில் அக்னிஹோத்ர ஹோமம் நடத்த வேண்டும் என, சிவகங்கை, திருக்கோஷ்டியூரில் நடந்த ஆன்மிக மறுமலர்ச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஸ்ரீரங்கம் - திருக்கோஷ்டியூர் வரை, ராமானுஜர் பாதயாத்திரை வந்ததை நினைவுகூறும் வகையில், வைணவ அடியார்கள், பாதயாத்திரை வந்தனர். சதுர்வேதி சுவாமிகள் தலைமையில், 300க்கும் மேற்பட்ட அடியார்கள், 120 கி.மீ., தூரம் நடந்து திருக்கோஷ்டியூர் வந்து சேர்ந்தனர். நேற்று, இங்கு சமய மறுமலர்ச்சி மாநாடு நடந்தது. இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:ராமானுஜரின் 1,000வது ஜெயந்தி விழாவை, தேசிய விழாவாக, மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். இந்து சமய ஒற்றுமைக்காக கங்கை, கோமாதா, காயத்ரி, கீதை, கோவிந்தன் ஆகிய ஐந்து புனித தத்துவங்களை பின்பற்ற வேண்டும்.வைணவ திருத்தலங்களில் நடந்த, "நித்ய அக்னிஹோத்ர ஹோமம் தடைபட்டு உள்ளது. இதனால், வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை தவிர்க்க, ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் போன்ற முக்கிய வைணவ திருத்தலங்களிலாவது, தினமும் ஹோமம் நடத்த வேண்டும். பசு வதையை தடை செய்யவேண்டும். அனைத்து மத தலைவர்களையும் ஒருங்கிணைத்து, நல்லிணக்க கூட்டம் நடத்தி, மத மாற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்.