பதிவு செய்த நாள்
28
ஜன
2013
10:01
தொடர் விடுமுறை காரணமாக, திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த, இரு தினங்களில் மட்டும், 1.40 லட்சம் பேர், சாமி தரிசனம் செய்தனர். மேலும், ஒரு லட்சம் பேர் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.திருமலை வெங்கடேச பெருமாளை தரிசிக்க, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கடந்த, இரு நாட்கள் அரசு விடுமுறை தினம் என்பதால், திருமலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கடந்த, இருதினங்களில் மட்டும், 1.40 லட்சம் பேர், இலவச சாமி தரிசனம் செய்து உள்ளனர். கியூ காம்ப்ளக்ஸ் இரண்டாவது வளாகம் நிரம்பி, வெளியே இரண்டு கி.மீ., தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். சாமியை தரிசிக்க, 16 மணி நேரம் ஆனது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், வி.ஐ.பி., தரிசனம் ரத்து செய்யப்பட்டது. 300 ரூபாய், சிறப்பு டிக்கெட் தரிசனமும், 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இவர்களும், 5 மணி நேரம் காத்திருந்து சாமியை தரிசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, 20 ஆயிரம் டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டது. டோக்கன் கிடைக்காத பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு தள்ளு,முள்ளு ஏற்பட்டது.இதேபோல், முடி காணிக்கை செலுத்தும் இடம், லட்டு வினியோகிக்கும் கவுன்டர்கள் ஆகிய இடங்களில், நீண்ட வரிசை காணப்பட்டது. சாமியை தரிசிக்க காத்திருக்கும் பக்தர்களுக்கு, தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும் உணவுகளை வாங்க, ஆங்காங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சனிக்கிழமையன்று மட்டும் ஒரே நாளில், 2.35 கோடி ரூபாய் உண்டியல் வசூல் ஆனது.பவுர்ணமியை ஒட்டி, நேற்று மலையப்ப சுவாமி கருடவாகனத்தில், மாடவீதிகளில் உலா வந்தார். இதை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.காளஹஸ்தியிலும் கூட்ட நெரிசல்:திருமலையில் கூட்டம் அதிகரித்ததன் எதிரொலியாக, காளஹஸ்தியிலும், பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. பவுர்ணமியை ஒட்டி நேற்று நடந்த ராகு,கேது சர்பதோஷ நிவாரண பூஜையில், ஒரே நாளில், 4,473 பேர் பங்கேற்று பூஜை செய்தனர். மேலும், 60 ஆயிரம் பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர்.
விடுமுறை தினங்களில் திருமலைசெல்ல முன்பதிவு அவசியம்:வார விடுமுறையையொட்டி மேலும் ஒரு நாளோ, இரு நாளோ விடுமுறை சேரும் பட்சத்தில், திருமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதில், பெரும்பாலும், எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல் வரும் பக்தர்கள் அதிகம். இவர்கள், சாமி தரிசனம் செய்வதற்கு, ஒரு நாளுக்கு மேல், கவுன்டர்களில் காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது.இதனால், பலர் சாமி தரிசனம் செய்யாமல், முடி காணிக்கை மட்டும் செலுத்திவிட்டு செல்கின்றனர். இவ்வாறு, ஏமாற்றம் அடையும் பக்தர்கள், தொடர் விடுமுறை வரும் நாட்களில், திருமலை செல்லும் போது, முன்கூட்டியே, முன்பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும். அல்லது திருப்பதியில் இருந்து, திருமலைக்கு அதிகாலை முதல் மதியத்திற்குள் பாதயாத்திரையாக செல்ல வேண்டும். விடுமுறை நாட்கள் அல்லாத, வார நாட்களில் செல்லும் போது, சாமி தரிசனம் செய்வதில் பிரச்னை இருக்காது. அவ்வாறு வார நாட்களில் செல்லும் போதுகூட, அதிகாலையில் திருப்பதியில் இருக்கும் வகையில் போனால், திருப்பதி ரயில்வே ஸ்டேசன் எதிரேயும், சீனிவாசா விடுதி, அலிபிரி ஆகிய இடங்களில், 50 ரூபாய் தரிசன டிக்கெட் கிடைக்க வாய்ப்பு உள்ளது.இதன் மூலம், ஒரே நாளில், சாமி தரிசனம் முடித்துவிட்டு, ஊர் திரும்புவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
- நமது சிறப்பு நிருபர் -