பதிவு செய்த நாள்
28
ஜன
2013
10:01
வடலூர்: வடலூர், சத்திய ஞானசபையில் நேற்று நடந்த, தைப்பூச ஜோதி தரிசனத்தை, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.கடலூர் மாவட்டம், வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 142வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா, நேற்று நடந்தது. கடந்த, 19ம் தேதி முதல், 21ம் தேதி வரை, தருமச்சாலையில் மகா மந்திரம் ஒதப்பட்டது. 22ம் தேதி முதல், 25ம் தேதி வரை, ஞானசபையில் திருஅருட்பா முற்றோதல் நடந்தது.
தருமசாலை, மருதூரில் அவதார சன்னதி, தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி ஆகிய இடங்களில், நேற்று முன்தினம் காலை, 7:30 மணிக்கு, கிராமத்தினர் சார்பில், சன்மார்க்க கொடி உயர்த்தப்பட்டது.சத்திய ஞான சபையில், நேற்று முன்தினம் காலை, 6:00 மணி, 10:00, பகல் 1:00, இரவு, 7:00, மற்றும் இரவு, 10:00 மணிக்கு "மனிதன் இறைவனை காண, தனது மனதில் இருந்து விலக்க வேண்டிய எண்ணங்களை அகற்ற வேண்டும் என்பதை விளக்கி கறுப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்மை, வெண்மை மற்றும் கலப்புத்திரை ஆகிய, ஏழு திரைகள் நீக்கி, ஐந்து காலங்கள் ஜோதி தரிசனம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி மகா மத்திரம் முழுங்கியபடி பக்தி பரவசத்துடன், தரிசனம் செய்தனர். வள்ளலார் சித்தி பெற்ற, மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருவறை தரிசனம் இன்று, 29ம் தேதி பகல், 12:00 மணிக்கு நடக்கிறது.