பதிவு செய்த நாள்
28
ஜன
2013
10:01
தஞ்சாவூர்: திருவையாறில், ஐந்து நாட்கள் நடக்கும் தியாகராஜர் ”வாமிகளின், 166வது ஆராதனை விழாவை, தமிழக கவர்னர் ரோசையா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் ”வாமிகளின் ஆராதனை விழா, திருவையாறில் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டும் தியாகராஜர் ”வாமிகளின், 166வது ஆராதனை விழா நேற்று துவங்கியது. இவ்விழா வரும், 31ம் தேதி வரை, ஐந்து நாட்கள் கோலாகலமாக நடக்கிறது.விழாவுக்கு, திருவையாறு காவிரியாற்றின் வடகரையில், தியாகராஜர் சமாதி முன், பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு, ஐந்து நாட்கள் நடக்கும் விழாவில், நாடு முழுவதும் இருந்து பிரபல இசைக்கலைஞர்கள் மற்றும் வளரும் கலைஞர்கள் பங்கேற்று, தியாகராஜர் கீர்த்தனைகளை பாடி, அஞ்சலி செலுத்தவுள்ளனர். துவக்க விழாவுக்கு, ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்ஸவ சபா தலைவர் ரெங்கசாமி மூப்பனார் தலைமை வகித்தார். மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், கலெக்டர் பாஸ்கரன் பங்கேற்றனர். தமிழக கவர்னர் ரோசையா, குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். கலெக்டர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். சபா செயலாளர் பழனிவேலு வரவேற்றார்.
தொடர்ந்து, முதல் நிகழ்வாக, அனுராதா ஸ்ரீராம் பாடினார். தொடர்ந்து, கத்ரி கோபால்நாத் சாக்ஸஃபோன் இசை நிகழ்ச்சி மற்றும் கன்னியாகுமரி கண்ணன் வயலின் நிகழ்ச்சி இடம் பெற்றது. சீனிவாசன், ராஜேஷ் ஆகியோர் மாண்டலின் நிகழ்ச்சி நடந்தது. ஆராதனை விழா, இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, இன்று பாடகர் உன்னிகிருஷ்ணன், காயத்ரி பாட்டு கச்சேரி நடக்கிறது. 29ம் தேதி ராஜேஷ்வைத்யா வீணை நிகழ்ச்சி, 30ம் தேதி இரவு மஹதி, சீர்காழி சிவசிதம்பரம், விஜய் ஏசுதாஸ், சுதா ரகுநாதன், ஏசுதாஸ் ஆகியோர் பாட்டு கச்சேரி நடக்கிறது. தியாகராஜர் முக்தியடைந்த தினமான, 31ம் தேதி காலை அவரது சிலை உஞ்சவிருத்தி பஜனையுடன் விழா அரங்கை ஊர்வலமாக வந்தடையும். பின்னர், தியாகராஜர் ”வாமி உருவ சிலைக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து, நித்யஸ்ரீ மகாதேவன் பாடுகிறார். இரவு பெங்களூரு சுமாசு தீந்ரா வீணை நிகழ்ச்சி, கர்நாடிகா சகோதரர்கள் சசிகிரன், கணேஷ் ஆகியோர் பாட்டு, அருண் பாட்டு, கணேஷ் மற்றும் குமரேஷ் ஆகியோர் வயலின், காயத்ரி க்ரீஸ் பாட்டு ஆகியவை இடம்பெறும். இதற்கான ஏற்பாட்டை, தியாக பிரம்ம மகோத்ஸவ சபா தலைவர் மூப்பனார் தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
* ஆராதனை விழாவில் பங்கேற்க விருத்தாசலத்திலிருந்து கார் மூலம், கவர்னர் ரோசையா தஞ்சைக்கு நேற்று வந்தார். சங்கம் ஹோட்டலில் மதியம் ஓய்வுக்கு பின், காரிலேயே திருவையாறு சென்றார். இதற்காக, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா முடிந்து, தஞ்சை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த கவர்னர் ரோசையா, ரயில் மூலம் சென்னை புறப்பட்டார்.