நெல்லிக்குப்பம்: காராமணிக்குப்பம் கோவிலுக்கு வந்த கடலுார் பாடலீஸ்வரர் தோப்பு உற்சவத்தில் அருள்பாலித்தார். அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் சிறப்பு அபிஷேகம், தீர்த்தவாரி நடைபெறுகிறது. தை மாதம் ஆற்றிலும், மாசி மாதம் கடலிலும் சுவாமிக்கு தீர்த்தவாரி நடைபெறும். ஆனி மாத பவுர்ணமியில் வன உற்சவம் என்று சொல்ல கூடிய தோப்பு உற்சவமும் நடப்பது வழக்கம். அதன்படி, கடலுார் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் சிந்தாமணி விநாயகர் கோவிலுக்கு நேற்று எழுந்தருளினார். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, வன உலாவும் சிறப்பு அலங்காரத்தில் பெரியநாயகி சமேதராய் பாடலீஸ்வரர் வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.