காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2026 12:06
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழாவில் பக்தர்கள் மாங்கனிகளை வீசி வழிபட்டனர். சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார். இயற்பெயர் புனிதவதியார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் பெண் நாயன்மாரான இவரது வாழ்க்கை வரலாறு, ஆண்டுதோறும் மாங்கனி திருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது.
சிவபக்தையான புனிதவதியார், தனது கணவர் பரமதத்தர் வாங்கி வந்த இரு மாங்கனிகளில் ஒன்றை அடியார் வேடத்தில் வீட்டிற்கு வந்த சிவபெருமானுக்கு உணவுடன் சேர்த்து படைத்தார். பின் வீட்டிற்கு வந்த கணவர் கேட்டதால், இறைவனை வேண்டி மாங்கனி வரவழைத்து கொடுத்தார். இதையறிந்த பரமதத்தர், நீ தெய்வ பிறவி என்று கூறி புனிதவதியாரை பிரிந்து, மறுமணம் செய்துகொண்டு வாழ்ந்தார். இதனால் பேய் உருவம் தரித்து, சிவபெருமான் உள்ள கையிலாயம் சென்றார். அங்கு, புனிதமிக்க கைலாயத்தில் தன் பாதங்கள் படக்கூடாது என்பதால் தலைகீழாக கைகளால் நடந்து சிவனை அடைந்தார். புனிதவதியாரின் பக்தியை மெச்சிய, தாயும், தந்தையும் அற்ற சிவபெருமான், புனிதவதியாரை ‘அம்மையே’ என அழைத்ததால் காரைக்கால் அம்மையார் என பெயர் வந்தது. இந்த வரலாற்று நிகழ்வை உணர்ந்தும் விதமாக மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது.
காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கடந்த 27ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் காரைக்கால் அம்மையார் – பரமதத்தர் திருக்கல்யாண உற்சவமும் நேற்று மாங்கனி திருவிழாவும் நடந்தது. மாங்கனி திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 9:10 மணிக்கு பவழக்கால் விமானத்தில் சிவபெருமான் காவியுடை, ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி வீதியுலா நடந்தது. அப்போது சிவபெருமானுக்கு பக்தர்கள் மாங்கனியை வைத்து அர்ச்சனை செய்து பின் வீட்டு மாடிகளில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜசேகரன், எம்.எல்.ஏ., விக்னேஷ்வரன், கோவில் நிர்வாக அதிகாரி சுப்ரமணியன், தனி அதிகாரி விநாயகமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனிகளை பிடித்து சென்றனர். மாங்கனி திருவிழாவில் பல்வேறு இடங்களில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். மாங்கனி திருவிழாவையொட்டி காரைக்காலில் அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.