பதிவு செய்த நாள்
29
ஜன
2013
11:01
சிவகங்கை: சிவகங்கை அருகே திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோவிலில், சுற்றுலாத்துறை மூலம் ஆமை வேகத்தில் வளர்ச்சி பணி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை ஒன்றியம், திருமலை ஊராட்சியில், மலை மீது அமர்ந்துள்ளது மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில். பாரம்பரிய மிக்க குடவரை கோவில்,சமணர் படுக்கை உள்ள இடங்கள் என பிரசித்தி பெற்ற தலம்.இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும்.சுற்றுலா பயணிகள் வருகைக்கு ஏற்ப, அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. கிராம மக்கள் சார்பில், சுற்றுலா துறை மூலம், இக்கோவிலில் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, 2012 மார்ச்-ல் திருமலை "மலைக்கொழுந்தீஸ்வரர் கோவிலை சுற்றுலா தளமாக அறிவித்து, அங்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள, முதல்வர் ஜெ., ரூ.16.39 லட்சத்தை ஒதுக்கினார். இதில், ரூ.5.85 லட்சத்தில் நவீன கழிப்பிடம், ரூ.2.46 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை, ரூ.3.52 லட்சத்தில் பல்வகை பயன்பாட்டு கூடத்தை புதுப்பித்தல், மலைமீது கிரிவல பாதை அமைத்து, பக்தர்கள் பிடித்து செல்ல இரும்பு கைப்பிடி அமைக்க ரூ.2.50 லட்சம், குடிநீர் வசதிக்கென ரூ.2 லட்சம் என ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான "டெண்டர் முடிந்து பணிகள் தொடங்கின. ஆனால், தற்போது பணிகள் "ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
ஒரு ஆண்டு முடிவடையும் நிலையில், இங்கு, நிழற்குடை, நவீன கழிப்பிடம், பல்வகை கட்டடம் புதுப்பித்தல், இரும்பு கைப்பிடி போடும் பணிகள் அனைத்தும் கிடப்பில் உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் அதிருப்தியில் உள்ளனர். ஆமை வேகத்தில் நடக்கும், திருமலை கோவில் பணியை துரிதப்படுத்த, கிராமத்தினர் கலெக்டர் ராஜாராமனிடம் புகார் செய்தும், நடவடிக்கை இல்லை. இதனால், சுற்றுலாத்துறை மூலம் ஒதுக்கிய நிதி விரயமாகிறது. சுற்றுலாத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: திருமலையில், வளர்ச்சிபணிகள் செய்ய, அரசு ஒதுக்கிய நிதி போதவில்லை. இதனால், பணிகள் நடப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இது தவிர, டெண்டர் எடுத்த கான்ட்ராக்டர்களும் பணிகளை செய்வதில், அக்கறை காட்டுவதில்லை. இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் அரசிடம் கூடுதல் நிதி கேட்டு பெற்று, பணிகள் முடிக்கப்படும், என்றார்.