பதிவு செய்த நாள்
29
ஜன
2013
11:01
பொங்கலூர்: பொங்கலூர், அலகுமலை முருகன் கோவிலில் தேரோட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது; ஆயிரக்கணக்கான பக்தர்கள், முருகப்பெருமானை தரிசித்தனர். அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் தைப்பூச திருவிழா, கடந்த திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் சனிக்கிழமை வரை, சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மாலை, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை 7.30 மணிக்கு, தேருக்கு சுவாமி எழுந்தருளினார். மதியம் 1.00 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி துவங்கியது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், வடம் பிடித்து துவக்கி வைத்தார். முதலில், விநாயகப்பெருமான் சிறிய தேரில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 3.00 மணிக்கு, பெரிய தேரோட்ட நிகழ்ச்சி துவங்கியது. மேள, தாளம் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மாலை 5.00 மணிக்கு நிலையை அடைந்தது. பல்லடம் டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில், அவினாசிபாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருக்காவடி குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இன்றும், நாளையும் சுவாமி வீதியுலா, நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை தரிசனம், மதியம் 12.00 மணிக்கு அன்னதானம், மாலை மஞ்சள் நீராடல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் சின்னு மற்றும் தேர்த்திருவிழாக் குழுவினர் செய்து வருகின்றனர். கணியாம்பூண்டி ஊராட்சி, முருகம்பாளையம் - அழகர் அப்பிச்சி பாறையில் உள்ள மங்களாம்பிகை உடனமர் மங்களநாதசுவாமி மற்றும் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா நடந்தது. காவடி எடுத்த பக்தர்கள், வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்த னர். கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், ஸ்ரீசண்முகநாதருக்கு சிறப்பு அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை, சிறப்பு அலங்கார தீபாராதனை ஆகியன நடந்தன. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள், பூஜைகள் நடத்தப்பட்டன. அவிநாசியில் இருந்து பக்தர்கள், பழனி தண்டாயுதபாணி கோவில், சென்னியாண்டவர் கோவில், பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில்களுக்கு பாதயாத்திரையாக சென்றனர்.