பதிவு செய்த நாள்
12
ஜூலை
2026
07:07
கமுதி; கமுதி அருகே வில்லனேந்தல் கிராமத்தில் 700 ஆண்டுகள் பழமையான அய்யனார் சிலையை தொல்லியல் துறையினர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கமுதி அருகே வில்லனேந்தல் கிராமத்தில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான அரிய அய்யனார் சிற்பம் வெட்டவெளியில் கண்டறியப்பட்டது. இது நான்கு அடிகள் உயரம் கொண்டிருந்த சிற்பத்தின் தலைப்பகுதி துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது.தலையில் கிரீட மகுடமும்,கழுத்தில் கண்டிகை, சரப்பளி, வாகுமாலை,தோள் மாலையும்,உடம்பில் உதர பந்தம், காதில் குண்டலங்களும்,கையில் கங்கணமும்,கால்களில் வீரக்கழலும், உடம்பையும் முழங்காலையும் சேர்த்து கட்டி இருக்கும் யோகப்பட்டையும் அணிந்துள்ளார். சிறிது மண்ணில் புதைந்து நிலையில் உள்ள இந்த சிற்பம் இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் உள்ளது.இதன் அருகே ஒரு அடி உயரம் பெண் சிற்பமும் உள்ளது.இது பிற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்ததாக மக்கள் கூறுகின்றனர்.மேலும் கடந்த சிலமாதத்திற்கு முன்பு இலங்கையிலிருந்து வந்து சிலர் ஆய்வு செய்தனர் என்று கிராமமக்கள் கூறினர்.இதுபோன்று கிரீட மகுடத்துடன் கூடிய அய்யனார் சிற்பங்கள் தமிழ்நாட்டில் அரிதாகவே கிடைத்துள்ளன.எனவே மாவட்ட நிர்வாகம்,தொல்லியல் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பழமையான அய்யனார் சிலையை பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.