கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், கார்த்திகை மாதத்தில் ஏகாதசி உற்சவம் கொண்டாடப்படுகிறது. நடப் பாண்டு ஏகாதசி உற்சவம் இன்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு, கிழக்கூட்டு அனியன் மாரார் தலைமையில், செண்டை மேளம் முழங்க, இந்திரசென் என்ற யானை மீது உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை, 9:00 மணிக்கு, பார்த்தசாரதி கோவிலுக்கு, பல்லச்சேனா முரளி மாரார் மற்றும் கலாமண்டலம் ஹரி நாராயணன் தலைமையில், பஞ்சவாத்தியம் முழங்க, தாமோதர்தாஸ் என்ற யானை மீது உற்சவர் எழுந்தருளினார். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இதில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஏகாதசி நோன்பு இருக்கும் பக்தர்களுக்கு, சிறப்பு கோதுமை சாப்பாடு மற்றும் கிழங்கு வகை, பயிர் வகை பிரசாதங்களும் வழங்கப்பட்டது. ஏகாதசி உற்சவத்தையொட்டி, நேற்று அதிகாலை முதல், பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்ட நடை, இன்று (22ம் தேதி) காலை, 7:00 மணிக்கு அடைக்கப்படும். அதன்பின் வழக்க பூஜைகளுடன், மாலை, 3:30 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு நடை திறக்கப்படும். ஏகாதசி உற்சவம் 23ம் தேதி நிறைவுபெறுகிறது. விழாவையொட்டி, கோவில் முன்பாக உள்ள மேல்ப்புத்தூர் கலையரங்கில் நடந்த செம்பை சங்கீத உற்சவம், நேற்று இரவு, 10:00 மணிக்கு செம்பை வைத்தியநாத பாகவதருக்கு பிடித்தமான கீர்த்தனை பாடலுடன் நிறை வடைந்தது. இந்த, 15 நாள் உற்ச வத்தில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.