19ம் நுாற்றாண்டு கோயில் கொடிமரத்தில் துல்லிய வானியல் பஞ்சாங்க குறிப்புகள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2026 10:07
ஆயக்குடி: திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆயக்குடி அகோபில பெருமாள் கோயில் கொடிமரத்தில் 19ம் நுாற்றாண்டை சேர்ந்த ஜமீன்தார்களின் பட்டயம் கண்டறியப்பட்டுள்ளது. துல்லிய வானியல் பஞ்சாங்க குறிப்புகளுடன் இந்த கொடிமரம் நடப்பட்டுள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது என தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: பழநி ஆயக்குடி அகோபில பெருமாள் கோயில் ஜமீன்தார்களால் கட்டப்பட்டது. இக்கோயில் கொடிமரத்தில் பொருத்தப்பட்டுள்ள உலோக தகட்டில் ஜமீன்தார்கள் எழுத்து பொறிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஐந்து வரிகளுடன் கூடிய பட்டயம் சாலிவாகன 1729, கலியுக ஆண்டு 4908, தமிழ் ஆண்டு பிரபவ ஆண்டை குறிக்கிறது. இதற்கு இணையான ஆங்கில ஆண்டு 1807. கொடிமரம் நடப்பட்ட நேரம், வானிலை பஞ்சாங்க குறிப்புகள் மிகத்துல்லியமாக உள்ளது. ஆனி மாதம் 15ல், சனிக்கிழமை, சப்தமி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம், நாம யோகத்தில் கொடிமரம் நடப்பட்டதாக பட்டயம் தெரிவிக்கிறது. சூரியன் உதித்து 15 நாழிகைக்கு மேல் கன்னியா லக்கினம் சந்திர ஓரையில் கொடிமரம் நடப்பட்டதாக பட்டயம் கூறுகிறது.
இது மதியம் 12:00 மணிக்கு மேல் 1:00 மணிக்குள் அமைந்த நேரம். பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை அன்று கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது. அறிவியல் வசதிகள் இல்லாத காலகட்டத்தில் துல்லியமாக வானிலை பஞ்சாங்கம் குறிப்புகளுடன் நல்ல நேரம் கணிக்கப்பட்டு கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆயக்குடி ஜமீனாக ஆட்சி செய்தவர்கள் கொண்டமநாயக்கர்கள். ஆந்திராவில் அகோபில பகுதியில் வாழ்ந்ததாகவும், முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பின் விளைவாக இடம் பெயர்ந்து ஆயக்குடி பகுதிக்கு வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இவர்கள் பழநி பாலசமுத்திர பாளையப்பட்டு ஜமீன்களான சின்னோபா நாயக்கர்களின் உறவினர்கள். இவர்களை பற்றிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.