சொந்தமா வீடு கட்டணுங்கற ஆசை யாருக்குத் தான் இல்லை! ஆனால், ஆனை அசைந்து தின்னும்! வீடு அசையாமல் தின்னும்! வீட்டைக் கட்டிப்பார்! கல்யாணம் பண்ணிப்பார் என்றெல்லாம், வீடு கட்டும் பட்ஜெட் பற்றி அக்காலத்திலேயே பாட்டிகள் சுலவடை சொல்லியிருக்கிறார்களே! வீடு கட்டும் பலர் பணம் புரட்ட படாதபாடு பட்டுட்டேன். இந்த வேலை எப்ப தான் முடியுமோ தெரியலை! என்று புலம்பும் அளவுக்கு பணநெருக்கடியில் சிக்கிக் கொள்வர். இத்தகைய பிரச்னை தீர்ந்து நல்லபடியாக வீடு கட்டி முடிக்க... இதோ! கட்டடப்பணி சிறப்பாக நிறைவேற சிறந்த பரிகாரம் இருக்கிறது. திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி குறித்து ஞானசம்பந்தர் பாடியுள்ள தேவாரப்பாடல் விசேஷமானது. தினமும் காலையில் நீராடியபின், இதனை மூன்று தடவை பாராயணம் செய்யுங்கள். திங்கள்கிழமையில் சிவபெருமானை வில்வ இலையால் அர்ச்சனை செய்து வாருங்கள். தடைகள் நீங்கி விரைவில் பணி நிறைவேறும். இதோ தடை நீக்கும் பாடல்: நன்று உடையானை தீயது இலானை நரை வெள்ளேறு ஒன்று உடையானை உமை ஒருபாகம் உடையானை சென்று அடையாத திரு உடையானை சிராப்பள்ளிக் குன்று உடையானைக் கூற என் உள்ளம் குளிரும்மே.