இன்று காலை மண்டபடிதாரர் சரவணமூர்த்தியுடன், உடையாம்பட்டி கிராம மக்கள் வடமதுரையின் நான்கு ரத வீதிகள் வழியே ஊர்வலம் வந்து திருவிழா கொடியை கோயிலுக்குள் கொண்டு வந்தனர். கொடிமரம் முன்பாக ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, சிறப்பு பூஜைகள் முடிந்ததும் காலை 10:45 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. ஆடி மாதத்தில் வரும் பவுர்ணமி நாளை தேரோட்டம் நடக்கும் 9வது நாள் நிகழ்வாக கொண்டு மொத்தம் 13 நாட்கள் இத்திருவிழா நடக்கிறது. தினமும் இரவு அனுமார், அன்ன, சிம்ம, கருட, சேஷ, யானை, புஷ்ப, குதிரை, ஊஞ்சல் கருட, விடையாத்தி குதிரை என பல வாகனங்களில் சுவாமி புறப்பாடும், மண்டகபடிதாரர் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சிகளாக ஜூலை 27ல் திருக்கல்யாணம், 29ல் தேரோட்டம், 31ல் வசந்தம் முத்துபல்லக்கு வைபவம் நடக்கிறது. விழா ஏற்பாட்டினை செயல் அலுவலர் முத்துலட்சுமி, தக்கார் சுரேஷ் கண்ணன், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.