இது குறித்து விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது. திருக்கோவிலூர் அடுத்த வடமருதூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் விஷ்ணு சிற்பம் வழிபாட்டில் இல்லாமல் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நேரில் சென்று ஆய்வு செய்தோம். 6 அடி உயரம் உள்ள பலகை கல்லில், விஷ்ணு நின்ற கோளத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். அவரது முன் கரங்களில் வலது கரம் அபயமுத்திரையுடனும், இடது கரம் இடுப்பின் மீது கை வைத்த நிலையிலும் காணப்படுகிறது. பின்இரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏத்தியுள்ளார். அழகிய தலை அலங்காரம், காதணிகள், கழுத்தணி, பாதம் வரையிலான முடிச்சுகளுடன் கூடிய இடையாடை அணிந்திருக்கிறார். மார்பில் தடித்த புனலுடன், தாமரை பீடத்தின் மீது கம்பீரமாக காட்சியளிக்கிறார். விஷ்ணுவின் கால்களுக்கு அருகாமையில் இரண்டு பக்கமும் கால்களை மடக்கி, கைகளை குவித்து வணங்கும் நிலையில், ஆணும், பெண்ணும் அமர்ந்திருக்கின்றனர். இவர்களின் தலைப்பகுதியை மகுடம் அலங்கரிக்கிறது. எனவே இவர்கள் அப்பகுதியில் ஆட்சி செய்த அரசன், அரசியாக இருக்கலாம். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இதுவரை கண்டறியப்பட்ட விஷ்ணு சிற்பங்களில் இது மாறுபட்ட அரிய சிற்பமாக உள்ளது. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால சிற்பமாகும். இப்பகுதியில் வைணவ ஆலயம் வழிபாட்டில் இருந்திருக்கலாம். கலை நயத்துடன் கூடிய இந்த அரிய சிற்பத்தை கிராம மக்கள் உரிய முறையில் பாதுகாத்து வழிபாட்டுக்கு கொண்டு வர வேண்டும் இவ்வாறு தெரிவிக்கிறார்.