பதிவு செய்த நாள்
31
ஜன
2013
11:01
மோகனூர்: மணப்பள்ளி பீமேஸ்வரர் கோவில் திருப்பணிக்காக, தமிழக அரசு, 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதை தொடர்ந்து, பாலாலய பூஜை நடத்தப்பட்டது. மோகனூர் அடுத்த மணப்பள்ளியில், பிரசித்தி பெற்ற பீமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நாற்புறமும் மணலால் சூழப்பட்டதால், மணப்பள்ளி என்ற பெயர் பெற்ற கிராமத்தில், காவிரிக்கரையில் அமைந்துள்ளது இக்கோவில். சுற்றுச்சுவரில் இருக்கும் கல்வெட்டுகள் மூலம் இக்கோவில், பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும், 14ம் நூற்றாண்டில் கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வனப்பகுதியில் தவம் செய்த பீமன், காவிரி மணலில், லிங்கம் உருவாக்கி வழிபட்டார் என்றும், பீமன் வழிபட்ட ஈஸ்வரர் என்பதால், "பீமேஸ்வரர் என்ற பெயர் விளங்கியதாகவும் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆற்று மணலில் உருவாக்கப்பட்ட பீமேஸ்வரர், கோவில் விளக்கு வெளிச்சத்தில் பொன் நிறத்தில் மின்னும். சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் இக்கோவில் பிரசித்தி பெற்றதாக இருந்தது என்றும், கோவிலில் இருக்கும் கல்வெட்டுகள் ராஜேந்திர சோழன் காலத்தை சேர்ந்தவை என்றும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இத்தகைய பழம் பெருமை வாய்ந்த பீமேஸ்வரர் கோவில், காலப்போக்கில் சிதிலம் அடைந்து, இடிந்து விழும் நிலையை அடைந்து விட்டது. கருவறை சுவர்களில் விரிசல் விழுந்து, வெளிப்புறம் கற்கள் சரிந்து விழுகின்றன.
கோவில் அமைந்திருக்கும் இடம், காவிரி மணல் என்பதால், வெள்ளம் வரும் காலங்களில் தண்ணீர் ஊற்றெடுத்து விடுகிறது. மழை காலங்களில் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது. அதனால், கோவில் கட்டுமானத்தின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூரை சேர்ந்த அர்ச்சகர் ஒருவர், தினமும் கோவிலுக்குள் சென்று தீபம் ஏற்றி வைத்து, பூஜை நடத்தி வருகிறார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவிலில், 2006ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியின் கடைசி காலத்தில், பீமேஸ்வரர் கோவில் திருப்பணிக்காக பக்தர்கள் பத்து லட்சம், அரசு, 15 லட்சம் என மொத்தம், 25 லட்சம் ரூபாய் மதிப்பில், கோவில் வளாகத்தில் திருப்பணி துவங்குவதற்கான பாலாலய பூஜை நடத்தப்பட்டது. அதைக்கண்டு பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். 14ம் நூற்றறாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த சிவன் கோவில் புதுப்பிக்கப்படுவதை எண்ணி, ஆன்மிக அன்பர்கள் மகிழ்ந்திருந்தனர். ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, அப்பணி கிடப்பில் போடப்பட்டது. திருப்பணி மேற்கொள்ளப்படுமா, என பக்தர்கள், ஆன்மிக அன்பர்கள் அனைவரும் கவலையில் ஆழ்ந்திருந்தனர். இந்நிலையில், கோவில் திருப்பணிக்காக, தமிழக அரசு, 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதை தொடர்ந்து, கோவிலில் பாலாலய பூஜையும் நடந்தது. இது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. விரைவில் திருப்பணி துவங்கும் என, பக்தர்கள், ஆன்மீக அன்பர்கள் எதிர்பார்த்துள்ளனர்.