பதிவு செய்த நாள்
31
ஜன
2013
11:01
திருத்தணி: கொள்ளாபுரியம்மன் கோவிலில் நடந்த உற்சவ திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி அடுத்த, கீழாந்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது கொள்ளாபுரியம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும், இரண்டு நாள் உற்சவ திருவிழா நடந்து வருகிறது. அதே போல் நேற்று முன்தினம் விழா துவங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியில், காலை, அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் இரவு, பரத நாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 5:00 மணிக்கு 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விரதம் இருந்து காப்புகட்டி, உடலில் அலகு குத்தி டிராக்டர் இழுத்தும், அந்தரத்தில் தொங்கியப் படி ஊர்வலம் வந்து உற்சவர் அம்மனுக்கு பூ மாலை அணிவித்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 3,000 பக்தர்கள் கலந்து கொண்டனர்.