பதிவு செய்த நாள்
01
பிப்
2013
11:02
தஞ்சாவூர்: 60 ஆண்டு பழமைவாய்ந்த கோவிலில் தடைபட்டுள்ள பூஜை, வழிபாடுகளை மீண்டும் தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்குமாறு, கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். தஞ்சை கலெக்டரிடம், கோரிக்குளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், 50க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: கோரிக்குளத்தில், ஜெயமங்கள விநாயகர் கோவில் உள்ளது. அதேபகுதியை சேர்ந்த சபாபதி மகன் சங்கிலிமுத்து, பஞ்சாயத்தார் முன்னிலையில், தனக்கு சொந்தமான ஒன்னே முக்கால் சென்ட் நிலத்தை கோவிலுக்கு கடந்த, 1952ம் ஆண்டு தானமாக வழங்குவதாக எழுதி கொடுத்துள்ளார். அந்த இடத்தில் கோவிலும் கட்டப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்கள் விநாயகரை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், தானமாக வழங்கிய சங்கிலிமுத்து பேரன் ராஜகோபால் என்பவர், கோவில் நிலத்தை ஆக்கிரமித்து, பக்தர்கள் செல்ல முடியாதவாறு தடுப்பு ஏற்படுத்தியுள்ளார். இதனால், 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோவிலில் பூஜை, வழிபாடு நடத்த முடியவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து, மீண்டும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.