மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2026 12:08
விழுப்புரம்; புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நள்ளிரவில் வெகு விமரிசையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணி அளவில் மூலவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகா ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு தங்க கவச அலங்காரம் சாற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான ஊஞ்சல் உற்சவத்திற்காக இரவு 11 மணி அளவில் உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். ஊஞ்சல் மண்டபத்தை அடைந்த அம்மனுக்கு கோயில் பூசாரிகள் மற்றும் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பாடல்கள் மற்றும் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடி வழிபட்டனர்.
தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நிறைவடைந்தது. தீபாராதனையின் போது பக்தர்கள் "அம்மா அங்காளம்மா" என பக்தி கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசை என்பதால் புதுச்சேரி, சென்னை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மேல்மலையனூரில் குவிந்தனர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் அறங்காவலர் குழுவினர் மற்றும் திருக்கோயில் ஊழியர்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.