மைசூரு: ‘‘மைசூரு தசராவில் பங்கேற்கும்படி, தமிழக முதல்வர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படும்,’’ என, முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: மைசூரு தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின் போது, கர்நாடகாவின் கலை, கலாசாரம், சுற்றுலாவை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகள் செல்லும். இந்த ஆண்டு வெளிமாநிலங்களை சேர்ந்த, அலங்கார ஊர்திகளுக்கும் வாய்ப்பு அளிக்கும்படி, அலங்கார ஊர்தியை தேர்வு செய்யும் குழுவினரிடம் கூறி உள்ளேன். தசரா என்பது கர்நாடகா மக்களுக்கான பண்டிகை மட்டுமல்ல. அனைத்து ஜாதி, மதம், மொழி பேசும் மக்களுக்கு உரியது. நமது மக்கள் வெளிமாநில கலாசாரத்தையும் பார்த்து ரசிக்க வேண்டும். தசராவில் பங்கேற்கும்படி, தென் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் தமிழகத்தின் விஜய், கேரளாவின் சதீஷன், ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானாவின் ரேவந்த் ரெட்டி, புதுச்சேரியின் ரங்கசாமி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.