பதிவு செய்த நாள்
14
ஆக
2026
10:08
வீராம்பட்டினம் ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில், ஆண்டுதோறும் தமிழ் மாதங்களின் வரிசையில் ஆன்மிக திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
தை மாதம்
உழவுக்குத் தோள் கொடுக்கும் காளைகளையும், பால் தரும் பசுக்களையும் போற்றிப் பாதுகாக்கும் நன்னாளான மாட்டுப் பொங்கலன்று, அம்மன் ரிஷப வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி வாண வேடிக்கைகள் அதிர வீதியுலா நடைபெறும்.
மாசி மாதம்
மாசிமகத் திருநாளில் வீராம்பட்டினத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் வீராம்பட்டினம் கடற்கரைக்கு எழுந்தருளுவர். அன்று காலையில், செங்கழுநீர் அம்மன் குளத்துமேட்டில் நின்றுகொண்டு வெளியூர் தெய்வங்களை அன்போடு வரவேற்கும் காட்சி நெஞ்சை நெகிழ வைக்கும். பின்னர் கடற்கரையில் தீர்த்தவாரி நடைபெறும்
பங்குனி மாதம்
பங்குனி உத்திர நாளில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பால்காவடி சுமந்தும், 4 சக்கர வாகனங்களை இழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
ஆடி மாதம்
ஆடி முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி தொடர்ந்து 6 வெள்ளிக்கிழமைகள் ஊரே விழாகோலம் பூணும் 3வது வெள்ளிக்கிழமைக்குப் பின் வரும் திங்கட்கிழமையன்று, குட்டியாண்டவர் கோவிலுக்குக் குதிரை விட்டுப் பொங்கலிட்டு வழிபாடுகள் நடக்கும். இரவில் கிராமியத் தெருக்கூத்து நடைபெறும்.
தேரோட்டம்
இக்கோவிலின் வரலாற்று சிறப்புமிக்க முதல் தேரோட்டம் கடந்த 1619ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி நடந்தது. பிரெஞ்சு ஆட்சிக்காலம் தொட்டுத் தொடரும் மரபுப் படி, புதுச்சேரி கவர்னர் தேரை வடம் பிடித்துத் தொடங்கி வைப்பார். இந்நிகழ்வில் முதல்வர், அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பலரும் பங்கேற்பர்.
தெப்பத் திருவிழாவும்... முத்துப்பல்லக்கும்...
தேரோட்டம் முடிந்த மறுநாள் சனிக்கிழமை மாலை, கோவில் தெப்பக்குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மிதவை தெப்பத்தில் அம்மன் மிதந்து வரும் தெப்பத் திருவிழா நடைபெறும். அதைத் தொடர்ந்து வரும் 6வது வெள்ளிக்கிழமையன்று காலையில் சுவாமி ஊர்வலமும், இரவில் ஒளிவெள்ளத்தில் மிளிரும் முத்துப் பல்லக்கு வீதியுலாவும் நடைபெறும்.
ஆவணி மாதம்
விநாயக சதுர்த்தி திருநாளின் நள்ளிரவில், விக்னங்களைத் தீர்க்கும் அருள் மிகு விநாயகப் பெருமான் வீராம்பட்டின மாட வீதிகளில் பவனி வருவார்.
புரட்டாசி மாதம்
விஜயதசமி நாளன்று அன்னை செங்கழுநீரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, ஊரின் வடக்குப் பகுதிக்குச் சென்று, அங்கே நட்டிருக்கும் வாழை மரத்தில் அம்பு குத்துதல் உற்சவம் நடை பெறும்.
கார்த்திகை மாதம்
திருவண்ணாமலை தீபத் திருநாளையொட்டி, வீராம்பட்டினத்திலும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடக்கும்.