பதிவு செய்த நாள்
03
நவ
2026
10:11
பொதுவாக ஒவ்வொரு கோவில்களிலும், ஒவ்வொரு விதமான வழிபாடுகள், பாரம்பரியம் இருக்கும். அதே போன்று, சித்ரதுர்காவில் அமைந்துள்ள ஸ்ரீரங்கநாத சுவாமி கோவிலிலும், சிறப்பான வழிபாடுகள் பின்பற்றப்படுகிறது.
சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூரு தாலுகாவின், வாணி விலாஸ் சாகரா அணை பகுதியில், இயற்கை எழில் மிகுந்த சூழலில், ஹாரனகனிவே ஸ்ரீரங்கநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. பக்தர்களை காந்தம் போன்று சுண்டி இழுக்கிறது. இந்த கோவிலுக்கு கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்.
ஹாரனகனிவே ஸ்ரீரங்கநாத சுவாமி, காடுகொல்லர் சமுதாயத்தின் குல தெய்வமாக விளங்குகிறார். இவரை தரிசனம் செய்து, வழிபட்டால் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களின் பீதி இருக்காது. விஷ ஜந்துக்கள் கடித்தாலும், விஷம் ஏறாது என்பது ஐதீகம். பக்தர்களுக்கு ஆரோக்கியம், நிம்மதி அளிப்பார். வாழ்க்கையில் பிரச்னைகள் ஏற்பட்டால், இங்கு வந்து ஸ்ரீரங்கநாத சுவாமியை தரிசித்து, பிரார்த்தனை செய்வர். அது விரைவில் சரியாகும் என்பது கிராமத்தினர் நம்பிக்கை.
பொதுவாக கோவில்களில் பூக்கள், தேங்காய், வாழைப்பழம் சமர்ப்பிப்பது சகஜம். ஆனால் ஹாரனகனிவே ஸ்ரீரங்கநாதசுவாமி கோவிலில், வெள்ளியால் தயாரிக்கப்பட்ட பாம்பு, தேள் உருவங்களை காணிக்கை செலுத்துவர். இந்த சம்பிரதாயம், நுாற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை, இந்த கோவிலில் திருவிழா நடக்கிறது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இவ்வேளையில் பக்தர்கள் வாழைப்பழம், சர்க்கரையால் தயாரித்த பண்டத்தை அங்குள்ள செடிகளில் போடுவர். பிரசாதம் வினியோகிப் பதும் சம்பிரதாயம்.