கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும், தருமச்சாலை மூலம் சன்மார்க்க கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் இந்து சமய அறநிலைய துறையின், வள்ளலார் தெய்வ நிலையம் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு சத்திய ஞான சபை அருகே புதிய கொடி மரம் நடும் நிகழ்வு நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை, 6:00 மணி முதல் புதிய கொடிமரம் நடும் பகுதியில் அமர்ந்து சன்மார்க்கர்கள் அகவல் பாராயணம் பாடினர். அவன் பின் புதிய கொடிமரம் ஜேசிபி., இயந்திரம் கொண்டு, சத்திய ஞான சபையை வலம் வந்து, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து நிகழ்வில் கலந்து கொண்டோர் கொடிமரம் நடும் வேளையில், வெள்ளி மற்றும், தங்க அணிகலன்களை கொடி மரம் நடும் பள்ளத்தில் இடுவதற்காக வழங்கினர். காலை 9:40 மணியளவில் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை மகா மந்திரம் முழங்க, புதிய கொடிமரம் நடப்பட்டது. நிகழ்வில் சன்மார்க்கர்கள், வடலூர் பார்வதிபுரம் பொதுமக்கள், வள்ளலார் பின்பற்றாளர்கள், வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிதாக நடப்பட்ட கொடிமரத்தில் வள்ளலார் அவதரித்த தினமான அக்டோபர், 5ம் தேதி, மாத பூச தினத்தில் கொடியேற்றம் செய்யப்படும். சத்திய ஞான சபையில் நடப்பட்ட புதிய கொடிமரம் ரூ.,25 லட்சம் செலவில் வடலூர், பார்வதிபுரம் பொதுமக்கள் சார்பில் நிதி திரட்டி, தயார் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.