ஒரே நாளில் 416 திருமணங்கள்; சரித்திரம் படைத்தது குருவாயூர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2026 07:08
பாலக்காடு; கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஒரே நாளில் 416 திருமணங்கள் நடைபெற்று புதிய வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் இக்கோவிலில், சிம்ம (ஆவணி) மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று திருமண வைபவங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றன. நேற்று அதிகாலை 4:10 மணிக்குத் தொடங்கிய திருமணச் சடங்குகள், உச்சிபூஜை நடை திறக்கப்பட்டு மதியம் 12:45 மணி வரை இடைவிடாது நீடித்தன. இதற்கு முன் 2024 செப். 8ம் தேதி ஒரே நாளில் 334 திருமணங்கள் நடைபெற்றதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று உடனடி முன்பதிவு உட்பட மொத்தம் 442 திருமணங்களுக்கு ரசீது வழங்கப்பட்டிருந்தது. அதிகாலையில் கிழக்கு நடையில் உள்ள 1ம் எண் மண்டபத்தில் தேவசம் தலைவர் கோபிநாத் குத்து விளக்கேற்றி திருமணங்களைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த 6 மண்டபங்களிலும் மங்கள வாத்தியங்கள் முழங்க திருமணங்கள் நடைபெற்றன. உஷபூஜை மற்றும் பந்தீரடி பூஜைக்காக நடை அடைக்கப்பட்ட நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் தொடர்ந்து திருமணங்கள் நடத்தப்பட்டன. இந்நிகழ்வில் தேவசம் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும், ஏ. எஸ். பி., சுரேந்திரனின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புப் படையினரும் அவசர கால தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.