பதிவு செய்த நாள்
04
பிப்
2013
11:02
ஆழ்வார்குறிச்சி :கடையம் முப்புடாதி, கீழக் கடையம் பத்திரகாளி அம்மன் கோயில்களில் நாளை (5ம் தேதி) கொடை விழா நடக்கிறது.கடையம் வடக்கு ரத வீதியில் முப்புடாதி அம்மன் கோயிலும், கீழக் கடையத்தில் பத்திரகாளியம்மன் கோயிலும் உள்ளது. பத்திரகாளியம்மன் கோயிலின் மூலக்கோயில் ராமநதி அணைக்கு செல்லும் வழியில் வில்வவனநாதர் நித்யகல்யாணிஅம்பாள் கோயில் கீழ்புறம் உள்ளது.முப்புடாதி அம்மன், பத்திர காளியம்மன் கோயில்களின் கொடை விழா நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 22ம் தேதி இரு கோயில்களிலும் கால்நாட்டுதல் வைபவத்துடன் கொடை விழா துவங்கியது.கடந்த 29ம் தேதி முதல் நாள் விழா துவங்கி நடந்து வருகிறது. நேற்று 6ம் திருநாள் விழாவில் முப்புடாதிஅம்மன் கோயிலுக்கு முச்சந்தி விநாயகர் கோயிலில் இருந்து மேளதாளம் வாணவேடிக்கையுடன் பால்குடம், பூந்தட்டுகள் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தது.கோயிலில் சங்காபிஷேகமும், விசேஷ தீபாராதனையும் நடந்தது.அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலையில் மாவிளக்கு ஊர்வலமும், சிறப்பு பூஜைகளும், கலை நிகழ்ச்சிகளும், இரவு அம்பாள் சப்பரத்தில் வீதியுலாவும் நடந்தது.கீழக் கடையம் பத்திரகாளியம்மன் கோயிலில் நேற்று நடந்த 6ம் நாள் விழாவில் மூலஸ்தான அம்மனுக்கு அபிஷேகமும், மாக்காப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. மதியம் அன்னதானமும், இரவு அம்மன் கண் திறப்பும், பின்னர் அபிஷேக, தீபாராதனையும் மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது.தொடர்ந்து கொல்லம் சுனில்குமாரின் செண்டாமேளம்,கடையநல்லூர் அம்மையப்பனின் நையாண்டி மேளம், தஞ்சாவூர் சத்யா-ராஜ் குழுவினரின் கரகாட்டமும் நடந்தது. பின்னர் சப்பரத்தில் அம்பாள் வீதிஉலா எழுந்தருளினார். ஏற்பாடுகளை 6ம் திருநாள் மண்டகபடிதாரர்கள் செய்திருந்தனர். இன்று 7ம்திருநாள் மண்டகபடிதாரர்கள் சார்பில் விழா, நாளை கொடை விழாவும் நடக்கிறது. கொடை விழா நாளில் இரவில் முப்புடாதிஅம்மன் தேரிலும், பத்திரகாளியம்மன் அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய சப்பரத்திலும் எழுந்தருளுகின்றனர்.வரும் 12ம் தேதி எட்டாம் பூஜை விழா நடக்கிறது. இதனால் கடையம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.