பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டில், கடைவீதி மாகாளியம்மன் கோவில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. சிதிலமடைந்த கட்டடத்துடன், போதிய இடவசதி பராமரிப்புகள் இன்றி இருந்த கோவிலை புனரமைக்க தீர்மானித்த பக்தர்கள், கடந்த, 2024ம் ஆண்டு பாலாலய கும்பாபிஷேகம் நடத்தினர். இதனையடுத்து, நடத்துவதில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு, புனரமைப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இரண்டு ஆண்டுக்குப் பின், புனரமைப்பு பணிகளை மீண்டும் துவங்க பக்தர்கள் தீர்மானித்தனர். கேரள ஜோதிடர் வரவழைக்கப்பட்டு, கோவில் கும்பாபிஷேகப் பணியில் ஏற்பட்டு வரும் இடையூறுகளுக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆராயப்பட்டது. அம்மனிடம் பூ வைத்து உத்தரவு கேட்கப்பட்ட நிலையில், உத்தரவு கிடைக்கவில்லை. பல்வேறு தோஷங்கள் இருப்பதன் காரணமாகவே கும்பாபிஷேக பணிகள் தடைபட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், ஜோதிடரின் அறிவுறுத்தலின்படி, சமீபத்தில், பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. இதனையடுத்து, பழைய கட்டுமானங்கள் இடித்த அகற்றப்பட்டு, கோவில் புனரமைப்பு பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் இருந்த மாகாளியம்மன் கோவில் புனரமைப்புப் பணிகள் துவங்கியுள்ளது, பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.