பதிவு செய்த நாள்
06
பிப்
2013
12:02
திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவில், 10ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தன. திருத்தணி அடுத்த, கே.ஜி., கண்டிகை, சாய்நகரில் ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று, 10ம் ஆண்டு விழா மற்றும் உலக நன்மைக்காக சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் நிர்வாகி சாய்சீனிவாசன் தலைமை வகித்தார். அறங்காவலர் கோபால் நாயுடு வரவேற்றார். விழாவை முன்னிட்டு காலை, 7:30 மணிக்கு மகா கணபதி ஹோமம், ஸ்ரீநாராயண ஹோமம், நவக்கிரக ஹோமம், ஷீரடி சாய் ஹோமம், சர்வ காயத்ரி ஹோமம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து மூலவர் சாய்பாபாவிற்கு விபூதி, பால், இளநீர், சந்தனம், மஞ்சள், பன்னீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடந்தது. இரவு, 7:00 மணி முதல், 9:00 மணி வரை அகந்த பஜனையும் நடந்தது. விழாவை ஒட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இதில் திருத்தணி, கே.ஜி., கண்டிகை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.