திருப்புத்தூர்: திருப்புத்தூர் நகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடந்து சிலைகள் கரைக்கப்பட்டது. சிலை கரைக்கப்பட்ட ஊரணியில் சில சிலைகள் கரையாமல் உள்ளது.
களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் ஆற்றில் கரையும்போது, ஊரணியில் நீரைசேமிக்கவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் உதவுகிறது. இந்த அடிப்படை காரணத்தால் மக்களிடையே விநாயகர் சிலை ஊருணிகளில் கரைப்பு துவங்கியது. பின்னர் நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்காக விநாயகர் சிலை ஊர்வலத்தை சுதந்திரப் போராட்ட தலைவர் திலகர் துவக்கி வைத்தார். தற்போது நாட்டில் பரவலாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் ஊர்வலமாக சென்று ஊருணியில் கரைக்கப்படுவது வழக்கமாகி விட்டது. துவக்கத்தில் களிமண் சிலைகள் என்பதால் ஊருணிகளில் எளிதாக கரைந்தது. தற்போது மண் சிலைகளுக்கு பதிலாக ப்ளாஸ்டர் ஆப் பாரீஸ், காகிதக் கூழ் , மாவு ....என்று பல விதங்களில் சிலைகள் தயாரிக்க துவங்கியதிலிருந்து சிலைகள் கரைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் திருப்புத்தூரில் நடந்த சிலைகரைப்பிலும் இதைப் பார்க்க முடிந்தது.
போதிய மழை இல்லாத நிலையில் சங்கிலியான் ஊருணியில் சிறிதளவு தண்ணீரே இருந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தினர் சிலைகளை ஊருணியில் சிலைகளை கரைத்தனர். ஆனால் ஊருணியில் போதிய நீர் இல்லாததால் வழக்கத்தை விட மெதுவாக சிலைகள் கரைந்தன. பல சிலைகள் ஊருணியில் கரையாமல் தற்போதும் உள்ளன. அடுத்த மழை பெய்து ஊருணியில் நீர் சேகரமானால் தான் சிலைகள் கரையும் நிலை ஏற்பட்டுள்ளது.