சங்கடஹர சதுர்த்தி, மஹாபரணி: வீட்டு வாசலில் ஒரு தீபம் ஏற்றுங்க.. மகாளய பட்சம் முழுவதிலும் வழிபட்ட பலன் கிடைக்கும்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2026 10:09
மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரத்தை மகா பரணி ஆகும். பரணி என்பது எமதர்ம ராஜனுக்குரிய நட்சத்திரம் ஆகும். இந்த நாளில் ஏற்கனவே சொன்னது போல் காலையில் எள்ளும் தண்ணீரும் இரைத்து, சூரியனை வழிபட்ட பிறகு, வீட்டில் விளக்கேற்றி, ஏதாவது நைவேத்தியம் படைத்து தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். மாலையில் வீட்டிலோ அல்லது கோவிலுக்கு சென்றோ தீபம் ஏற்ற வேண்டும். இன்று மாலை வீட்டு வாசலி்ல் ஒரு தீபம் ஏற்றி வழிபடுவது முன்னோர்களுக்கு மோட்சத்தை கொடுக்கும். மகாளய பட்சம் முழுவதிலும் முன்னோர்களை வழிபட்ட பலனும் நமக்கு கிடைக்கும்.
நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும். தேய்பிறைச் சதுர்த்தி மிகமிக உயர்வானது. அது மஹா சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது. அந்த நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும். இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும்.
சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி ! ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான். நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம் இரவு சந்திரன் உதயமானவுடன் சந்திரனுக்கு அர்க்கியம் தந்து, விநாயகரை வழிபட சகல நலமும் கிடைக்கும்!