சோலைமலை முருகன் கோவில் திருப்பணியில் சிருங்கேரி மஹா சுவாமிகளின் அளப்பரிய பங்கு
பதிவு செய்த நாள்
02
அக் 2026 09:10
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக இருந்தது. வள்ளி, தெய்வானை சமேத முருகனின் பாரம்பரிய மூலவர் திருமேனி அங்கு இல்லை. கடந்த 1960-ம் ஆண்டுகளில், முறையான கோவில் அமைப்பை நிறுவி, மூலவர் திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்யும் திருப்பணி தொடங்கப்பட்டது. கோவில் ஆகம மரபுப்படி அமைய, ஆன்மிக மற்றும் சாஸ்திர ரீதியான வழிகாட்டுதல் தேவைப்பட்டதால், திருப்பணிக்குழுவினர், சிருங்கேரி ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மஹா சுவாமிகளின் வழிகாட்டுதலை நாடினர். அதற்கு இசைவு தெரிவித்த ஜகத்குரு, கோவிலின் சரியான இருப்பிடத்தையும், திருமேனிகளுக்கு தேவையான குறிப்பிட்ட உருவ அமைப்பையும் உறுதிப்படுத்தினார். புராணங்கள் மற்றும் ஆகமங்களிலிருந்து தேவையான சாஸ்திர ஆதாரங்கள், முறையான சடங்குகள், சாஸ்திரப்படியான கட்டட அமைப்பு, கும்பாபிஷேக வழிமுறை குறித்தும் குழுவுக்கு ஆலோசனை வழங்கினார். கடந்த 1966-ம் ஆண்டில், மதுரை உள்ளிட்ட தென்பகுதி விஜய யாத்திரையில் புதிய கோவிலுக்கான பூமி பூஜையை ஜகத்குரு நிகழ்த்தினார். பூமி பூஜையைத் தொடர்ந்து, ஜகத்குருவின் ஆலோசனைப்படி முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை ஆகியோரின் புதிய திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதையடுத்து, அந்தத் தலம் எளிய வேல் சன்னதியிலிருந்து முழுமையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவிலாக மாற்றம் பெற்றது.குருநாதரின் தெய்வீக சான்னித்யமும், ஆசீர்வாதமுமே தற்போதைய சோலைமலை முருகன் கோவில் எழுப்பப்பட்டதன் அடித்தளமாகக் கருதப்படுகிறது. இந்த ஆழ்ந்த ஆன்மிக தொடர்பு, தமிழகத்தின் மிகப்புனிதமான கவுமார தலங்களில் ஒன்றைப் பாதுகாத்து புத்துயிர் அளித்ததில் ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மஹா சுவாமிகளின் அளப்பரிய பங்களிப்பை எடுத்துக்காட்டுகிறது. நாளை (3-ம் தேதி) சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 35-வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மஹாசுவாமிகளின் 37-வது ஆராதனை நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
|