காஞ்சிபுரம் கூரத்தாழ்வார் கோவில் சீரமைப்பு ரூ.91 லட்சம் ஒதுக்கீடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02அக் 2026 12:10
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே, கூரம் கிராமத்தில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் மற்றும் கூரத்தாழ்வார் கோவிலை சீரமைக்க, ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் 91 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திருப்பணிகளை மேற்கொள்ள, துறை சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அருகே உள்ள கூரம் கிராமத்தில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் மற்றும் கூரத்தாழ்வார் இக்கோவில், வைணவ ஆச்சாரியரான கூரத்தாழ்வார் அவதரித்த திருத்தலம் என்ற சிறப்பை பெற்றது. கோவில் வளாகத்தில் ஆதிகேசவப் பெருமாளுக்கு தனி சன்னிதியும், கூரத்தாழ்வாருக்கு தனி சன்னிதியும் உள்ளன. பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படும் இக்கோவில், பின் சோழர் மற்றும் விஜயநகர மன்னர்கள் காலங்களில் விரிவுபடுத்தப்பட்டதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவிலில் பல்வேறு காலங்களைச் சேர்ந்த கல்வெட்டுகளும் உள்ளன. இந்நிலையில், கோவிலின் கட்டடங்கள் மற்றும் வளாகத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திருப்பணிகளை மேற்கொள்ள ஹிந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 91 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கோவில் கட்டடங்களில் வண்ணம் பூசுதல், மராமத்து பணிகள், வளாகத்தை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பணிகளை மேற்கொள்ள தகுதியான ஒப்பந்ததாரரை தேர்வு செய்வதற்காக டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இக்கோவிலில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவிலின் கட்டடங்கள் மற்றும் வளாகம் புதுப்பொலிவு பெறுவதுடன், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் மேம்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.