பதிவு செய்த நாள்
07
பிப்
2013
12:02
சாத்தூர்: சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நாளை (பிப்., 8) தை கடைசி வெள்ளிப்பெருந்திருவிழா நடக்கிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், ஆடி, தை மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம், ஆடி, தை கடைசி வெள்ளிப்பெருந்திருவிழாவில் ,திருச்செந்தூர், திருநெல்வேலி, நாகர்÷காவில், தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதிகளில் இருந்தும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், முடிகாணிக்கை செலுத்தியும் பொங்கலிட்டும் அம்மனை வழிபடுவர். நாளை கடைசி வெள்ளிப்பெருந்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருச்செந்தூரில் இருந்து ,பாதயாத்திரையாக வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அக்னிசட்டி, ஆயிரங்கண் பானை, முடிகாணிக்கை , சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்து வழிபட்டனர். விழாவை முன்னிட்டு கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால், சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி, திருநெல்வேலி பகுதிகளில் இருந்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.200 போலீசார்: இன்று பிற்பகல் முதல் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால், பாதுகாப்பு பணிக்காக 200 போலீசார் இருக்கன்குடி வந்துள்ளனர். கோயில் வளாகத்தில் சி.சி.டி.வி., கேமரா வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம், சிவகாசி நகராட்சி மூலம் மொபைல் கழிவறைவசதியும் செய்யப்பட்டுள்ளது.