பதிவு செய்த நாள்
07
பிப்
2013
12:02
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், ஆழத்து விநாயகர் உற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவத்தையொட்டி, கோவில் வளாகத்திலுள்ள ஆழத்து விநாயகர் உற்சவ விழா, நேற்று துவங்கியது. அதிகாலை விருத்தாம்பிகை, பாலாம்பிகை, விருத்தகிரீஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 6:30 மணிக்கு ஆழத்து விநாயகர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக் கவசத்தில் விநாயகர் அருள்பாலித்தார். காலை 10:30 மணியளவில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. மாலை 6:00 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு 7:00 மணிக்கு விநாயகர் வீதியுலாவும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து 9ம் தேதி மாலை 6 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன் வீதியுலா, 10ம் தேதி சோமாஸ்கந்தர், சோமாஸ்கந்தருடன் வீதியுலா, 11ம் தேதி இரவு விநாயகர் மற்றும் நால்வருடன் வீதியுலா, 12ம் தேதி விநாயகர் நால்வருடன் வீதியுலா, பாரிவேட்டை (வேடு பரி உற்சவம்) நடக்கிறது. 13ம் தேதி 7:30 மணிக்கு தேர் திருவிழா, 14ம் தேதி பகல் 1:00 மணிக்கு தீர்த்தவாரி, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.